சச்சின் டெண்டுல்கரெல்லாம் ஒரு ஆளா!? சொல்லாமல் சொல்லிய ஐசிசி – கடுப்பான ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை குறைத்து மதிப்பிடும் வகையில் ஐசிசி ட்விட்டர் பதிவுகளை இட்டு வருவதால் இந்திய ரசிகர்கள் செம கோபத்தில் இருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடியதற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருக்கு அந்த விருதை இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்தார்.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்ட ஐசிசி “கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரருடன் சச்சின் டெண்டுல்கர்” என்று பதிவிட்டிருந்தனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடுப்புக்கு உள்ளாக்கியது. உடனே கமெண்டிற்குள் புகுந்த ரசிகர்கள் சச்சினின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லி “நீங்கள் எப்படி சச்சின் சிறந்த வீரர் இல்லை” என்பதுபோல பேசலாம் என வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஸஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். உடனே அப்போது போட்ட ட்விட்டர் பதிவை தோண்டியெடுத்து ரீ-ட்வீட் செய்த ஐசிசி ”நாங்கள்தான் முன்னமே சொன்னோமே” என்று பதிவிட்டுள்ளனர்.
ஆறிப்போன பிரச்சினையை ஐசிசியே தோண்டியெடுக்கும்போது சும்மா இருப்பார்களா சச்சின் ரசிகர்கள். மீண்டும் கமெண்டுகளில் போய் ஐசிசியை தாக்க தொடங்கியுள்ளனர். சச்சின் டெண்டுல்கரை மீண்டும் மீண்டும் அவமரியாதை செய்வதுபோல் ஐசிசி இப்படி செய்வதை ரசிகர்கள் பலர் வன்மையாக கண்டித்துள்ளனர்.