கே கே ஆர் அணிக்கு ஆலோசகராக டிராவிட்டா?... ஷாருக் கான் ஆசை!
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான். கேப்டனாக படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை வென்று விடைபெற்றுள்ளார்.
இந்நிலையில் வீரர்கள் அறையில் விடைபெறும் போது நெகிழ்ச்சியாக பேசிய அவர் “நான் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் விடைபெற வேண்டும் என நினைத்தேன். ஆனால் ரோஹித் ஷர்மாதான் எனக்கு அழைத்துப் பேசி எனது பதவிக் காலத்தை நீட்டிக்க சொன்னார். அவரின் அந்த அழைப்பால்தான் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.” என அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்க, அந்த அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.