வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (15:26 IST)

யோகி அரசின் புதிய மதமாற்றத் தடுப்பு மசோதா இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறதா? - சர்ச்சை ஏன்?

yogi adithyanath

உத்தரபிரதேசத்தில் மத மாற்ற விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
 

சமீபத்தில் அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில பா.ஜ.க அரசு, சட்டப்பேரவையில் மதமாற்ற தடுப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.
 

இந்தச் சட்டதிருத்த மசோதாவில் மத மாற்றத்திற்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் பெயர் 'உத்தரபிரதேச சட்ட விரோத மத மாற்றத் தடைச் (திருத்தம்) சட்டம் 2024.'

 

உண்மைகளை மறைத்து, அல்லது மிரட்டி மத மாற்றம் செய்வது இந்த மசோதாவில் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
 

மத மாற்றத்திற்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதும், சட்டவிரோதமான முறையில் நிதி சேகரிப்பதும் குற்றமாக கருதப்படும் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதற்கான தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

கேள்விகளும் அரசின் வாதமும்


 

இந்த மசோதா கடந்த திங்கள்கிழமை (ஜூலை 29) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு, ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 

குற்றத்தின் தன்மை, பெண்களின் கண்ணியம், மற்றும் சமூக அந்தஸ்து, பெண்கள், பட்டியல் சமூகத்தினர் (எஸ்.சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) போன்றோரின் சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுக்க இது தேவை என்று உணரப்பட்டது என்று இந்த மசோதாவின் நோக்கம் குறித்து உத்தரபிரதேச அரசு கூறியிருக்கிறது.
 

இந்தக் குற்றத்திற்கான அபராதம் மற்றும் தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதால் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பெண்களின் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறை இருப்பதாக அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
 

தனது அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, 'ஆண்டி ரோமியோ’ போன்ற எதிர்ப்புப் படைகள் அமைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் குற்றவாளிகளின் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைத்ததாகவும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) சட்டப்பேரவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். ஆனால் சமாஜ்வாதி கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக குறிப்பாக பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
 

2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 24,402 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

 

புதிய மசோதா என்ன சொல்கிறது?


 

இந்த மசோதா சரியானதுதான் என்று மாநில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். "இந்த மசோதாவில் எந்த சர்ச்சையும் இல்லை. சட்ட விரோத மத மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே இந்த மசோதாவின் நோக்கம்," என்று உத்தரபிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா கூறினார்.
 

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே, இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 

"பொய்ப் புகார் கொடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
 

இதற்கு பதிலளித்த சுரேஷ் கன்னா, "தற்போதுள்ள சட்டத்தில் பொய்ப் புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடு உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

யாரேனும் ஒருவர் மிரட்டியோ அல்லது உயிர் அல்லது சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் அளித்தோ மதம் மாற்றினால் அது கடுமையான குற்றமாகக் கருதப்படும் என்று மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
 

மேலும் ஒருவர் மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் திருமணம் செய்து கொண்டாலோ, மைனர் பெண் அல்லது பெண்ணை ஆள் கடத்தல் செய்தாலோ அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
 

இந்த மசோதா சட்டமானால், மத மாற்றம் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்.
 

முந்தைய சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது சகோதரர் அல்லது பெற்றோர் மட்டுமே புகார் அளிக்க முடியும்.
 

அவ்வாறு புகார் அளிக்கப்பட்டால் அது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். கூடவே செஷன்ஸ் நீதிமன்றத்தை விட கீழ் நிலையில் இருக்கும் நீதிமன்றத்தால் அதை விசாரிக்க முடியாது. அதேசமயம் ஜாமீன் குறித்த உத்தரவை வழக்கு தொடுத்தவரை விசாரிக்காமல் முடிவுசெய்ய முடியாது.
 

நீதிமன்றம் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்.

 

'மசோதாவின் பின்னணியில் அரசியல் நோக்கம்'


 

அரசியலமைப்பை மேற்கோள் காட்டிப் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் ஆராதனா மிஷ்ரா, "இது ஒரு முக்கியமான பிரச்னை என்பதால், புகார் உண்மையா இல்லையா என்பதை விசாரிக்கும் கமிஷனை அமைக்க வேண்டும்,” என்று கோரியுள்ளார்.
 

"கட்டாய மத மாற்றம் ஒரு கடுமையான குற்றம் என்று நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அரசு கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அது எப்போதும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை, சில சமயங்களில் அது தானாகவும் நடக்கும்," என்று ஆராதனா குறிப்பிட்டார்.
 

உத்தரப் பிரதேசத்தில் இந்த திருத்த மசோதாவுக்கு எதிராக பல வகையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 

உத்தரபிரதேச சட்டப்பேரவை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ டாக்டர் ராகினி சோன்கர் பிபிசி-யிடம் பேசுகையில், "இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஏனெனில் இரண்டு இளம் வயதினர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. அவர்களின் பெற்றோரும் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மூன்றாவது நபரின் புகாருக்கு என்ன அவசியம்?" என்றார்.
 

"காவல்துறையின் மீதிருக்கும் பயத்தால் ஒரு ஏழை தனது கருத்தை வெளிப்படுத்த முடியாது. மேலும் இதுபோன்ற கடுமையான சட்டங்களுக்குப் பின்னால் உள்ள அரசின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவர்கள் தேவையற்ற பிரச்னைகளின் மீது கவனத்தை திசைதிருப்புகிறார்கள்,” என்று அவர் சொன்னார்.

 

எதிர்ப்புக் குரல்கள்

மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. ஆனால் அரசு அதை கவனிக்காமல் ‘லவ் ஜிஹாத்’ பற்றி பேசுகிறது என்று யோகியின் மசோதா குறித்து சமூகவியலாளர் பேராசிரியர் ரமேஷ் தீட்சித் பிபிசி-யிடம் கூறினார்.
 

"முஸ்லிம்களை எப்படித் துன்புறுத்துவது என்பதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் எண்ணமாக இருக்கிறது. இரண்டு பேர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், அதில் என்ன பிரச்னை? அதை 'லவ் ஜிஹாத்' என்று சொல்லிவிடுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
 

மத மாற்றச் சம்பவங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன. இப்போது நடப்பதில்லை. யாருமே தங்கள் மதத்தை விரும்பி விட்டுச் செல்வதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார் அவர்.
 

“அரசின் நேரத்தைப் பாருங்கள். உள்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் போது இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது,” என்று சமூக ஆர்வலரும் காங்கிரஸ் தலைவருமான சதஃப் ஜாபர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
 

”முதலில் திருமணம் என்பது ஒரு சிவில் விஷயம். அதை குற்றமாக்குவது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்,” என்றார் அவர்.
 

"வயது வந்த இரண்டுபேர் தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்தால், அதில் அரசின் பங்கு என்ன? பெற்றோரும் அதற்குத் தயாராக இருக்கும்போது மூன்றாவது நபருக்கு பேச என்ன உரிமை இருக்கிறது? உண்மையில் இது பஜ்ரங் தளம் போன்ற விளிம்பு நிலை குழுவை மற்றொருவரின் விஷயத்தில் தலையிட அனுமதிப்பது போன்றது," என்று சதஃப் ஜாபர் குற்றம் சாட்டுகிறார்.
 

ஆனால் மாநில அரசு இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

 

பழைய சட்டம் என்ன சொல்கிறது?


 

மாநிலத்தின் நடப்பில் இருக்கும் பழைய சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது உடனடி உறவினர்கள் அதாவது பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும்.
 

இதற்கு முன்பு ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மசோதாவில் திருமணத்திற்காக மட்டுமே செய்யப்படும் மத மாற்றம் செல்லாது என கூறப்பட்டுள்ளது.
 

மத மாற்றத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. விதிமீறல்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 

பழைய சட்டத்தில், மோசடியாக அல்லது கட்டாய மத மாற்றத்திற்கு, ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு இருந்தது.
 

முன்பு மோசடி திருமணம் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
 

இதற்கான அவசரச் சட்டம் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது 2021-இல் அது சட்டமாக்கப்பட்டது.
 

மறுபுறம் மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் நடைபெறுகிறது என்றும், குறிப்பாக திருமணத்தைக் காரணம் காட்டி மக்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து ஏமாற்றித் திருமணம் செய்கிறார்கள் என்றும் இந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன