புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (12:38 IST)

ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

யுக்ரேனில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அணு ஆயுதங்கள் உட்பட தனது எதிர்ப்புத்திறன்களை "சிறப்பு உஷார் நிலையில்" வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளின் ஆக்ரோஷமான அறிக்கைகள் அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியதாக புதின் தனது பாதுகாப்புத்துறை தலைவர்களிடம் கூறினார்.

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த விரும்புகிறது என்ற அவரது அறிவிப்புக்கு அர்த்தம் இல்லை. ஆனால், அவரது அறிவிப்பு உலகில் அணு ஆயுதங்கள் பற்றிய விவாதத்தை ஆரம்பித்துள்ளது.

பனிப்போர் காலத்திற்குப்பிறகு அணு ஆயுதங்களின் கையிருப்பு வெகுவாகக் குறைந்திருந்தாலும், மிகக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இன்னும் உலகில் உள்ளன.

அணு ஆயுதங்கள் என்றால் என்ன?

இவை மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அல்லது குண்டுகள் ஆகும்.

இந்த குண்டுகள், அணுவின் அணு அல்லது அணுக்கரு துகள்களை பிளப்பது அல்லது இணைப்பது மூலம் தங்கள் சக்தியைப் பெறுகின்றன. இது அறிவியல் மொழியில் இணைவு (Fusion) அல்லது பிளவு( Fission) என்று அழைக்கப்படுகிறது.

அணு ஆயுதங்களின் பயன்பாடு பெரிய அளவிலான ரேடியேஷன் அதாவது கதிர்வீச்சை வெளியிடுகிறது. எனவே, அவற்றின் விளைவு வெடிப்புக்குப் பிறகு மிக நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.

அணு ஆயுதங்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளனவா?

உலகில் இதுவரை இரண்டு முறை அணுகுண்டுகள் போடப்பட்டு அவை பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இரண்டு தாக்குதல்களையும் 77 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நடத்தியது. ஜப்பானின் இரண்டு நகரங்களின் மீது அது அணுகுண்டுகளை வீசியது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீதும், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியிலும் அமெரிக்கா அணுகுண்டுகளை வெடிக்கச்செய்தது.

ஹிரோஷிமாவில் 80,000க்கும் அதிகமானோர் மற்றும் நாகசாகியில் 70,000 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது.

எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன?

உலகில் தற்போது ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

இந்த நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா.

அவர்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை என்ன?

அணு ஆயுதங்களைப் பற்றி எந்த நாடும் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அணு ஆயுத நாடுகளின் ராணுவத்திடம் 9,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட 'ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (SIPRI) என்ற சிந்தனைக் குழு கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஒன்பது நாடுகளிடம் சுமார் 13,400 அணு ஆயுதங்கள் இருந்தன என்றும் அவற்றில் 3,720 ஆயுதங்கள் படைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறது.

இந்த ஆயுதங்களில் சுமார் 1,800 அதிக உஷார் நிலையில் உள்ளன. அதாவது, அவற்றை குறுகிய நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று SIPRI கூறுகிறது.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருக்கும் என்று அது மேலும் தெரிவிக்கிறது.

இந்தியாவிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

அணு ஆயுதங்களைப் பொருத்தவரை இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விடக் கூடுதலாக வைத்திருக்கின்றன என்று SIPRI அறிக்கை தெரிவிக்கிறது.

2021ல் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும் இருந்தன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒன்பது நாடுகளிடம் மட்டும் ஏன் அணு ஆயுதங்கள் உள்ளன?

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 1970ஆம் ஆண்டில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அதாவது NPT எனப்படும் ஒரு ஒப்பந்தம், 190 நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவும் இதில் அடங்கும். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை. 2003ல் வடகொரியா அதிலிருந்து விலகியது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டான 1967க்கு முன்பாக அணு ஆயுதங்களை சோதனை செய்த ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் கீழ், அணு ஆயுத நாடுகளாக கருதப்பட்டன.

இந்த நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா.

இந்த நாடுகள் தங்கள் ஆயுத சேகரிப்பை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது அதாவது, அவற்றைக் குறைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

கூடவே இந்த நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்தன.

ஆனால் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் ஆயுதங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அதே போல இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.