செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:13 IST)

ரத்த தானம் செய்து 88 உயிர்களைக் காப்பாற்றிய நாய்க்கு இனி ஓய்வு!

இதுவரை 22 முறை குருதிக் கொடை செய்து 88 நாய்களின் உயிரை காப்பாற்ற உதவிய க்ரேஹௌண்ட் வகை நாய் ஒன்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு குருதிக் கொடை வழங்குவதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது.
 
பிரிட்டனில் உள்ள லேஸ்சர்ஷர் நகரைச் சேர்ந்த வுட்டி எனும் இந்த க்ரேஹௌண்ட் வகை நாய் தமது மூன்றே முக்கால் வயதில் குருதிக் கொடை செய்யத் தொடங்கியது.
 
"மோசமான மன வருத்தம் தரக்கூடிய சூழல்களில் அந்த குடும்பங்களுக்கு உதவுவது மிகவும் அற்புதமானது," என்று இந்த நாயின் உரிமையாளரான வெண்டி க்ரே எனும் பெண்மணி தெரிவித்துள்ளார்.
 
செல்லப் பிராணிகளுக்கான ரத்த வங்கிகள் நடத்தும் பெட் ப்ளட் பேங்க் யூ.கே எனும் தன்னார்வ அமைப்பு, ஒரு நாயின் உடலில் இருந்து ஒரு முறை 450 மில்லி ரத்தம் எடுக்கப்பட்டால் அதன் மூலம் நான்கு நாய்களின் சிகிச்சைக்கு உதவ முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
 
"இத்தனை நாய்களைக் காப்பாற்றிய வுட்டி நாய் ஒரு சூப்பர் ஸ்டார்," என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா?
நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
க்ரேஹௌண்ட் வகை நாய்களின் ரத்தம் பெரும்பாலும் 'நெகட்டிவ்' ரத்தமாக இருப்பதால் இந்த வகை நாய்கள் ரத்தத்துக்கு பெரும்பாலும் தட்டுப்பாடு இருப்பதாக கூறியுள்ளதுடன் இந்த ரத்தத்தை அவசர காலங்களில் எந்த நாய்க்கு வேண்டுமானாலும் உடலில் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது பெட் ப்ளட் பேங்க் யூ.கே.
 
30% நாய்களுக்கு மட்டுமே நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு வயது முதல் எட்டு வயதுக்கு உள்பட்ட நாய்களின் உடலில் இருந்து மட்டுமே ரத்தம் எடுக்க முடியும் என்பதால் தற்போது எட்டு வயதை கடந்து வுட்டியால் மேலதிகமாக குருதிக் கொடை செய்ய முடியாது.
 
வுட்டி குருதிக் கொடை வழங்குவதில் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவே இருந்ததாக இதன் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
 
"எல்லாம் முடியும் வரை மேசையின் மீது படுத்துக் கொண்டு அசையாமல் இருப்பான். குருதிக் கொடை வழங்கிய பின்பே எழுவான். குருதிக் கொடைசெய்வதை அவன் நேசிக்கிறான் இதன் காரணமாக எந்த விதமான எதிர்மறை விளைவுகளும் அவனது உடலில் ஏற்படவில்லை. குருதிக் கொடை செய்த பின்பு 4 முதல் 8 மணி நேர நடைபயிற்சிக்கு அவன் தயாராக இருப்பான்," என்றும் வெண்டி க்ரே தெரிவித்துள்ளார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் கால்நடை மருத்துவர் ஒருவரை சந்திக்க சென்றிருந்த பொழுது அங்கு இருந்த விளம்பரம் ஒன்றின் மூலம் நாய்களும் குருதிக் கொடை வழங்க முடியும் என்பதைத் தாம் அறிந்து கொண்டதாகவும், தமது முதல் நாயான ரியோ 11 முறை குருதிக் கொடை வழங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
மனிதர்கள் சக மனிதர்களுக்கு குருதிக் கொடை செய்யும் பொழுது நாய்கள் சக நாய்களுக்கு ஏன் அதைச் செய்யக்கூடாது என்றும் வெண்டி க்ரே கேட்கிறார்.