புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (13:52 IST)

தமிழ்நாட்டில் தொடரும் மனித - விலங்கு மோதல்: சிறுத்தைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும்?

கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலங்களில் சிறுத்தைகள் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிக்கிக் கொள்வதும் இதனால் ஏற்படும் மோதல்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகமாக பதிவாகி வருகின்றன.

சமீபத்தில் வால்பாறையில் தென்பட்ட சிறுத்தை ஒன்று 11 வயது சிறுவனை தாக்கிச் சென்றுள்ளது. கோவை குனியாமுத்தூரில் சிக்கிய இன்னொரு சிறுத்தை ஐந்து நாட்கள் கழித்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உலவிய சிறுத்தை பொதுமக்கள் இருவரை தாக்கிய நிலையில் அதனை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிறுத்தை வல்லுநர் வித்யா ஆத்ரேயா, ''நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் சிறுத்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

புலியையோ, சிறுத்தையையோ ஓர் இடத்தில் பிடித்து வேறோர் இடத்தில் விடுவதனால் இந்த மோதல்கள் முடிவுக்கு வருவதில்லை என்பதுதான் நாங்கள் கற்றுக்கொண்ட முதல் பாடம்.''

''உருவத்தில் சிறிய விலங்கு என்பதால் சிறுத்தைகள் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு எளிதாக இடம்பெயர்ந்துவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் சிறுத்தைகள் சேர்ந்து வாழும். அதன் பின்னர் தனக்கான எல்லையை விரிவாக்கம் செய்யும். இதனால் சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. எல்லை என்கிற வரையறை மனிதனாக வகுத்ததுதான். விலங்குகளுக்கு அதெல்லாம் தெரியாது,'' என்றார்.

பல நூற்றாண்டுகளாக சிறுத்தைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்துள்ளது. இதனால் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதை கையாள்வதற்கு தான் நாம் மக்களை பயிற்றுவிக்க வேண்டும். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மனித குடியிருப்புகளில் சிறுத்தைகள் சிக்கிக் கொள்வது நிகழ்கிறது. சிறுத்தைகள் மனிதர்களை தாக்காது, மனிதர்களுடனான தொடர்பை தவிர்க்கத்தான் பார்க்கும்.

எனவே சிறுத்தைகள் தானாக வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிடும். சிறுத்தைகள் தென்படும் இடங்களில் மனிதர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கூண்டு வைத்து பிடிப்பதை கடைசி வாய்ப்பாகத் தான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கூண்டு வைத்து பிடித்தாலும் சிறுத்தையை பிடித்த இடத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் விட வேண்டும்.

சிறுத்தையை வேறு இடங்களில் விட்டால் அவை தங்களுடைய சொந்த எல்லைகளுக்குத் தான் திரும்பி வரும், அது மேலும் மனிதர்களுடனான மோதல்களை அதிகரிக்கும் என்பதால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

''ஆனால் வனத்துறைக்கு பொதுமக்கள், அரசியல் மற்றும் சமயங்களில் ஊடகங்களிலிருந்து வருகிற அழுத்தமும் பெரிய நெருக்கடியாக உள்ளது. சிறுத்தையை பிடித்தே ஆக வேண்டும் என அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. அதற்கான வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை வனத்துறை அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும்.

சிறுத்தை தொடர்பான அச்ச உணர்வு இதற்கு தீர்வாகாது. இது போன்ற சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஊடகங்களும் இது போன்ற விஷயங்களை பரபரப்பாக்காமல் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும்,'' என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், ''வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் சிறுத்தைகள் தென்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் சிறுத்தை தென்பட்டிருப்பது அரிதான ஒரு நிகழ்வு. இந்த சிறுத்தை சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து இரை தேடி இங்கு வந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. சில சமயங்களில் வழி தவறிய சிறுத்தைகளும் இம்மாதிரி மனிதர்கள் வாழும் பகுதிகளில் சிக்கிக் கொள்வது வழக்கம்.''

''வனத்துறைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். சிறுத்தை தான் சிக்கிவிட்டதாக உணர்ந்தால் அந்த இடத்தை விட்டு தப்பித்துக் கொள்ளத்தான் பார்க்கும். தன்னை தாக்குவதாக உணர்ந்தால் தான் கடுமையாக நடந்துகொள்ளும். அவிநாசியில் மனிதர்களை தாக்கியுள்ள இந்த சிறுத்தை வேறு எங்கும் கால்நடைகளை தாக்கவில்லை. எனவே வழிதவறியும் கூட வந்திருக்கலாம்.''

''அவிநாசியில் விவசாயிகள் வயலில் கத்தியுடன் பணியில் இருந்ததால் எங்கே தன்னை தாக்குகிறார்களோ என எண்ணி தற்காப்புக்காக தாக்கியுள்ளது. சிறுத்தை அதன் வழியிலே திரும்பிச் சென்றுவிட்டால் சிக்கல் இல்லை. கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. சிறுத்தை தான் இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு எளிதில் தன்னை தகவமைத்துக் கொள்ளக்கூடிய வனவிலங்கு. இது போன்ற சமயங்களில் பொதுமக்கள் எளிதில் அச்சமடைவது உண்மை தான். ஆனால் இது அரிதான நிகழ்வு தான். சிறுத்தையை கண்டுகொண்டாலும் அதனை சீண்டாமல் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.