புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (14:27 IST)

வட - தென் கொரியா இடையே துப்பாக்கிச் சூடு: எல்லையில் நடந்தது என்ன?

ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென வரையறுக்கப்பட்ட கொரிய எல்லை பகுதியில் வடகொரியாவும் தென் கொரியாவும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
 
மத்திய எல்லை பகுதியான சேர்வன் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 7.41 மணிக்கு வட கொரிய வீரர்கள் தென் கொரிய வீரர்களை சுட்டனர் என்கிறது தென் கொரிய ராணுவம். 
 
தென் கொரியா வீரர்கள் யாரும் இதில் பலியாகவில்லை என்கிறது தென் கொரியா. இதற்கு பதிலடி தரும் விதமாக தென் கொரியா ராணுவம் இரண்டு ரவுண்டுகள் சுட்டதாகவும் மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கையேட்டில் உள்ளபடி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டதாகவும் கூறுகிறது தென் கொரிய ராணுவம்.
 
அதிகாரிகள் வட கொரியாவை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எதன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது என தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வட கொரிய ராணுவம் தென் கொரிய எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது இதுவே முதல் முறை.
 
1953 ஆம் ஆண்டு கொரிய போர் முடிந்ததும் இரு நாட்டு எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென சில பகுதிகள் வரையறுக்கப்பட்டன. மூன்று வாரங்களுக்குப் பிறகு கிம் ஜாங் உன் பொதுவெளியில் காட்சி தந்த பின் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.