1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (10:05 IST)

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகி வரும் ஆல்கஹால் அற்ற பீர் மற்றும் ஒயின்

ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின். ஆம். நீங்கள் படித்தது சரிதான். பீர், ஒயின் என்றாலே மதுபானங்கள் தானே. அதென்ன ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின் என்று கேட்கலாம்.
 

ஆஸ்திரேலியாவின் சிட்னி வடக்கு பகுதியின் கடற்கரை ஓரத்தில் தொழில்முனைவோரான ஐரீன் ஃபால்கோன் முதன் முதலாக ஆல்கஹால் அல்லாத பீர் மற்றும் ஒயின் கடை ஒன்றை திறந்துள்ளார். அவரது கடையின் பெயர் 'சான்ஸ் டிரிங்க்ஸ்'.
 
"இதுதான் ஆஸ்திரேலியாவின் முதல் ஆல்கஹால் அல்லாத மதுபானக்கடை. மேலும் இங்கிருக்கும் ஒரு பெரிய மதுக்கடைக்கு நேரெதிரே என் கடையை  திறந்திருக்கிறேன். ஒரு தொழில்துறையை சீர்குலைக்க வந்திருக்கிறேன்" என்கிறார் ஐரீன்.
 
தற்போது ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற பானங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.
 
"முன்புபோல் கிடையாது. தற்போது இதை அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர்" என்கிறார் ஐரீன்.
 
மாற்றம்
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஆஸ்திரேலியாவிற்கு குடி என்பது புதிது கிடையாது. உலகின் அதிகம் மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் முதல் சில  இடங்களில் இந்த நாடு இல்லை என்றாலும், இங்கு பொது இடத்தில் மது அருந்துதல் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே. யார் வேண்டுமானாலும் எளிதாக மது வாங்கலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் விலையும் குறைவுதான்.
 
ஆனால், இந்த பழக்கம் சற்று மாறிக் கொண்டு வருவது போல தெரிகிறது.
 
"ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நாம் போய் கொண்டிருக்கிறோம்" என்கிறார் தனது மனைவி கரோலைனுடன் ஆல்கஹால் அல்லாத பானங்களை தயாரிக்கும் அலிஸ்டர் வைட்லி.
 
பெரும் மதுபான நிறுவனங்கள் விற்கும் மதுபானங்கள் ஒருபக்கம் இருக்க, ஆல்கஹால் அல்லாத பானங்களையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
 
"நான்கு பேருடன் கூடிப் பேசி, மகிழ ஏதோ ஒரு பானம் தேவைப்பகிறது. அது மதுவாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை" என்கிறார் கரோலைன்.
 
எனினும் போதைக்காக ஆஸ்திரேலிய மக்கள் தேர்ந்தெடுப்பது மதுபானங்களைதான். மதுபானத்தை பொறுத்தவரை எந்த அளவும் ஆபத்துதான் என்கிறார்கள் சுகாதார  அதிகாரிகள். இருப்பினும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் 10கிராம் ஆல்கஹாலுக்கு மேல் அருந்துவது மிக ஆபத்து என அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 20 ஆண்டுகளில் 18ல் இருந்து 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் குடிக்காமல் இருப்பது இரட்டிப்பாகி உள்ளதாக லா டிரோப் பல்கலைக்கழகத்தின் மதுபான கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
27 வயதாகும் ஜெஸ் ஸ்டோர் மதுவிலக்கை கடைபிடித்து வருகிறார்.
 
அனைத்து விதமான மதுபானங்களையும் குடித்துவந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பழக்கத்தை கைவிட்டார்.
 
"எனது இருபதுகளில் பதற்றத்தால் அதிகம் குடித்து வந்தேன். ஆனால் தற்போது என் மனநிலை சிறப்பாக இருக்கிறது. குடித்து உங்கள் உணர்வுகளை இழப்பதை விட, இந்த உலகத்தை உணர்வது நன்றாக இருக்கிறது" என்கிறார் அவர்.
 
அதே போல வயதான சில ஆஸ்திரேலியர்களும் மதுவிலக்கை விரும்புகிறார்கள்.
 
"மது இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்கிறார் இரண்டு பதின்ம வயது குழந்தைகளின் தாயான 44 வயதாகும் ஜனீன் யங்.
 
ஜனீன் தனது 15 வயதில் குடிப்பழக்கத்தை தொடங்கினார். பின்னர் அவரால் ஒரு சில நாட்களில் இரண்டு பாட்டில்கள் ஒயின் வரை குடிக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டார்.
 
"நான் அப்போது இக்கட்டான சூழலில் இருந்தேன். என்னால் என் குழந்தைகளுக்கோ என் கணவருக்கோ என் நேரத்தை கொடுக்க முடியவில்லை. பதற்றமாகவும், யாருடன் பேசாமலும், மன சோர்வுடனும் இருந்தேன். எனக்கு இருந்த பதற்றம் அனைத்தும், நான் குடிப்பழக்கத்தை நிறுத்தியவுடன் காணாமல் போனது."
 
அதே நேரத்தில் மதுப்பழக்கத்தை விடும் முடிவு பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறியது.
 
"ஆரம்பத்தில் மதுப்பழக்கம் இல்லாதது ஒரு மாதிரியான பார்வையை தந்தது. தற்போத அது ஒரு நேர்மறையான வாழ்வியல் முடிவாக பார்க்கப்படுகிறது" என்கிறார்  Sober upside என்ற ஆஸ்திரேலிய ஆதரவு மற்றும் ஆலோசனை இணையதளத்தின் சாரா கொனெலி.
 
கொரோனா பெருந்தொற்றும் மாற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்களை தள்ளியது.
 
சிட்னியில் இருக்கும் மோடஸ் ஒபெராண்டி ஆலையில் சக நிறுவனர் ஜாஸ் வியரின். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஆல்கஹால் அற்ற நார்ட் பீரை  அறிமுகப்படுத்தியது.
 
"இந்தப் பெருந்தொற்றுக்கு முன் மக்கள் சற்று அதிகமாக குடித்து வந்தார்கள். உண்மையில் இருந்து தப்பிக்கும் வழியாக அது இருந்தது. மக்களின் வாழ்வில்  சமநிலையை உருவாக்க இது எனக்கு கிடைத்த வாய்ப்பாக பார்த்தேன். பீர் மாதிரியான சுவையில், ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க முடியும் என்று  நினைத்தேன். ஆனால், அதை இத்தனை பேர் விரும்புவார்கள் என நினைக்கவில்லை என்கிறார்" வியரின்.
 
ஆஸ்திரேலியர்களால் மதுவை ஒட்டுமொத்தமாக விடமுடியாது, ஆனால், ஒரு சமநிலையை எதிர்ப்பார்க்கிறார்கள்.