வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:08 IST)

ரஞ்சன் ராமநாயக்க: இலங்கை எம்.பிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

இலங்கையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 12) தீர்ப்பளித்துள்ளது.

 
நீதித்துறையை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் பிரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
 
இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால், ரஞ்சன் ராமநாயக்க, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய ரஞ்சன், நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
 
இதனையடுத்து, நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தி, நீதித்துறையை அவமதித்ததாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக மகல்கந்தே சுநந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர் சுனில் பெரேரா ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சராகப் பதவி வகித்த ரஞ்சன் ராமநாயக்க, இலங்கையின் சிங்கள சினிமாத்துறையில் பிரபல நடிகராவார். இவர் அண்மையில் தனக்கு மொத்தமாகக் கிடைத்த 40 லட்சம் ரூபா நாடாளுமன்ற அமர்வுப்படியை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் பேசுப்பொருளானது.
 
அரசியல்வாதிகள், நீதித்துறை சார்ந்தோர் உள்ளிட்ட பலருடன் ரஞ்சன் ராமநாயக்க பேசும்போது பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள், சில காலங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியமையை அடுத்து, அவர் சர்ச்சைக்குரியவராகப் பார்க்கப்பட்டார்.