'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும்'!
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம்'
கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எதற்கெல்லாம் பயன்படும்?
உலக அளவில் விநியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது.
இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ள மாத்திரைகளை வைத்து பார்த்தால் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - இலவச பரிசோதனை
கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் அரசு மற்றும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட தனியார் பரிசோதனை மையங்கள் இலவசமாகவே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
பரிசோதனைக் கட்டணத்தின் உச்ச வரம்பாக 4,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை - வடமாநில சரக்கு வாகனங்களை தடுக்க கூடாது
வடமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள் தடையின்றி தமிழகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்ததாக, அதிமுக மாநிலங்களவை குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது குறித்தும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.