வானில் வியாழன், வெள்ளி 'இணையும்' நிகழ்வை தமிழ்நாட்டில் எப்படிப் பார்க்கலாம்?
வெள்ளியும் வியாழனும் வானத்தில் ஒரே நேர்கோட்டில் சந்தித்து, கிட்டதட்ட ஒன்றை ஒன்றை தொட்டுவிடுவது போல காட்சியளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
இதனை ஆங்கிலத்தில் 'கன்ஜக்ஷன்' என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும்.
சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது.
“இதுகுறித்து கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நாசா, நிலவு, வியாழன், மற்றும் வெள்ளி ஆகிய மூன்றும் அருகருகில் காட்சியளிக்கிறது
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் தொடர்ந்து நெருக்கமாக காட்சியளிக்கும். மார்ச் ஒன்றாம் தேதி அது மேலும் நெருக்கமாக தெரியும்.” என்று நாசா தெரிவித்திருந்தது.
“சூரியனை சுற்றும் வெவ்வேறு கோள்கள் என்றாவது ஒரு சமயத்தில் நேர்கோட்டில் காட்சியளிக்கும். தற்போது வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கின்றன” என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்.
இதற்கு ஏதேனும் தனித்துவம் உள்ளதா?
கடந்த சில வாரங்களாக வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு கோள்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கி வருவதை போல தெரிந்தாலும், நிஜத்தில் அவை 60 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன.
இந்த இரண்டு கோள்களும் அடிக்கடி நேர்கோட்டில் சந்திக்கும் ஒன்றுதான் என்கிறது நாசா.
“இதற்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை; இது ஒரு இயல்பான நிகழ்வுதான். இது ஒரு அழகியல். வானத்தில் பார்க்கும்போது இது ஒரு அழகான காட்சியாகதான் தெரியும்.” என்றார் த.வி. வெங்கடேஷ்வரன்.
மேலும், "இது அவ்வப்போது வெவ்வேறு விதமாக வெவ்வேறு கோள்களுக்கு இடையே நடைபெறும் ஒன்றுதான். இந்த முறை வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களுக்கு இடையே இது நடைபெறுகிறது." என்கிறார் அவர்.
வியாழன் கோள்களில் உள்ள நிலவுகளை நாம் பார்க்க முடியுமா?
வியாழன் கோள்களில் உள்ள பிரகாசமான நிலவுகளை நாம் பார்க்க முடியும்.
“வியாழன் கோள்களில் உள்ள பிரகாசமான நிலவுகளை தொலைநோக்கி மற்றும் பைனாகுலர் மூலம் நாம் பார்க்கலாம். ஆனால் வெறும் கண்களால் அதை பார்க்க முடியாது.” என்கிறார் த.வி. வெங்கடேஷ்வரன்.
தமிழ்நாட்டில் இதை பார்க்க முடியுமா?
"உலகம் முழுவதும் இதை பார்க்கலாம் இது இரவு வானத்தில் நிகழ்கிறது எனவே பூமியின் எந்த பகுதியில் இருந்தும் இதை பார்க்கலாம்." என்கிறார் த.வி. வெங்கடேஷ்வரன்.
வானம் தெளிவாக இருக்குபோது இந்த நிகழ்வை சாதாரண கண்களால் நம்மால் பார்க்க முடியும். ஆனால் பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கியில் நம்மால் மேலும் தெளிவாக பார்க்க முடியும்.