வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (10:08 IST)

அயோத்தி பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக, இந்து தன்னார்வலர்களுடன் இருந்த புகைப்பட கலைஞர் ப்ரவீன் ஜெயின் தனது புகைப்படங்களையும், அன்று நடந்த நிகழ்வுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி பனி மாலைப் பொழுதில் அயோத்தியா சென்றடைந்தேன்.

பாபர் மசூதி பகுதியில் ஒன்று சேருவதாக எதிர்பார்க்கப்பட்ட இந்து தன்னார்வலர்கள் மற்றும் இந்துத்துவா தலைவர்களை பயனீர் செய்தித்தாளுக்காக புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்டிருந்தேன்.

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊழியர்கள் அங்கு ஏற்கனவே கூடியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துக்களின் கருத்தியல் ஆதாரமாகும். இதில் தற்போது நாட்டை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் அடங்கும்.

ராமர் பிறந்த இடமாக நம்பப்படும் அயோத்தியில், ராமர் கோயில் கட்ட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். மசூதியை தொடமாட்டோம் என்று அவர்கள் வாக்களித்திருந்தனர்.

ஆனால், டிசம்பர் 5 ஆம் தேதி காலை பாபர் மசூதியை இடிப்பதற்கு, ஒத்திகை நடக்கப்போவதாக எனக்கு தெரிந்த பா.ஜ.க எம்.பி ஒருவர் கூறினார்.

"எந்த ஊடகங்களுக்கும் இந்தத் தகவல் கசிந்துவிடக் கூடாது என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீ என் நண்பன் என்பதால் நான் உன்னிடம் சொல்கிறேன்" என்று அந்த எம்.பி தெரிவித்தார்.

காவித் துண்டு, தலைப்பாகை மற்றும் சிறப்பு நுழைவு பேட்ஜ் அணிந்து ஒரு தொண்டர் போல மாறுவேடமிட்டு, மசூதிக்கு அருகில் இருந்த மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். காவித்துண்டு மற்றும் தலைப்பா அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர்.

"ஒத்திகையை புகைப்படம் எடுக்க இதுதான் ஒரே வழி. என்னுடனே இருந்து தொண்டர்கள் போல கோஷங்களை எழுப்பு. இப்படி செய்தால் நீ பாதுகாப்பாக இருப்பாய்" என்று ஒரு செயலர் என்னிடம் கூறினார்.

என்னருகே வந்த நபர் ஒருவர், என் முன் நின்று என் கேமராவை கீழே போட சொல்லி சைகை காண்பித்தார். அவரிடம் நான் என் பேட்ஜை காண்பித்து அங்குள்ளவர்களைப் போல கத்தி கோஷமிட்டேன். பின்பு தூரத்திலிருந்த பெரிய கூட்டத்தை நோக்கி என்னை அவர் போகச் சொன்னார்.

என் கேமராவை எடுத்து என் கண்முன் நடந்த நம்பமுடியாத காட்சிகளை புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். இரும்புக்கம்பிகள், கோடாரிகள், மண்வாரிகள் போன்றவற்றை வைத்திருந்த ஆண்களை பார்க்கும் போது அவர்கள் தொண்டர்கள் போல அல்ல, கட்டடத்தை தரைமட்டமாக்குவதையே தொழிலாக வைத்திருப்பவர்கள் போல இருந்தனர்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 2009 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில்: "பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பு ஒரு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையத்திற்கு முன் கூறப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களும் ஆணையப் பதிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சிலருக்கு பயிற்சியளிக்கப்பட்டது குறித்த உறுதியான சான்று இல்லையென்றாலும், சில சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. மேலும், பாபர் மசூதியை இடிக்க கர சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என சில வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டுகின்றன." என்று கூறுகிறது.

தொண்டர்கள் கூட்டத்தில், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டிருந்த ஒருவரை நான் படம் பிடித்தேன். கயிறுகளாலும் இரும்பு சரடுகளாலும் இடிப்பு ஒத்திகை மேற்கொண்டிருந்தவர்களுக்கு அவர் கட்டளையிட்டு கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு வலதுசாரி கட்சித் தலைவர்களில் ஒருவர் போல் இருந்தார். அதனால் முகத்தை காண்பிக்க அவர் விரும்பவில்லை.

இடிப்பு ஒத்திகையை வெற்றிகரமாக முடித்த தொண்டர்கள், உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பினர். உடனே, நான் என் கேமராவை மறைத்துக் கொண்டேன். கூட்டத்தோடு கோஷம் எழுப்பிக்கொண்டு, இந்த ஒத்திகையை பார்த்து புகைப்படம் எடுத்த ஒரே பத்திரிக்கையாளர் நான் தான் என்ற சிலிர்ப்பில் வெளியே வந்தடைந்தேன்.

அடுத்த நாள், நான் உள்ளிட்ட மற்ற பத்திரிக்கையாளர்களும் மசூதியை பார்க்க ஏதுவாக ஒரு கட்டடத்தின் நான்காவது மாடியில் ஏறி நின்று கொண்டோம். 1.5 லட்சம் தொண்டர்கள் ஊர்வலமாக வருவதை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பகுதியில் காவலுக்கு நின்ற போலீசாரும் கோஷங்களை எழுப்பினர். நண்பகல் சுமார் 12.15 மணிக்கு வன்முறையில் ஈடுபட தொடங்கிய அவர்கள், போலீசாரையும், மசூதியை பாதுகாத்திருந்த காவலர்களையும் தாக்கத் தொடங்கினர்.

இச்சம்பவம் குறித்த புகைப்பட ஆதாரங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காக, நான்காவது மாடிக்கு ஏறி அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களையும் புகைப்படக்காரர்களின் கேமராக்களையும் தாக்கத் தொடங்கினர்.

இதெல்லாம் நடந்த சில மணி நேரங்களிலேயே மசூதி தரைமட்டமாக்கப்பட்டது.

என் கால்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஹோட்டலை நோக்கி ஓடினேன்.

கலவரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. எனக்கு உதவ போலீசார் யாரேனும் உள்ளனரா என்று சுற்றும்முற்றும் பார்த்தேன். ஆனால் அனைவரும் கடைகள், வீட்டின் ஜன்னல் கதவுகளை எல்லாம் மூடிக் கொண்டிருந்தனர்.

மசூதியை அவர்கள் தரைமட்டமாக்கிய அன்று, ஒரு இந்துவாக பிறந்ததற்கு அவமானமாக உணர்ந்தேன்.

லிபரான் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்தேன். சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று வரை சாட்சிக்காக அழைக்கப்படுகிறேன்.

25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதற்கு காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.