புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (14:31 IST)

அதிமுக கூட்டத்தில் இரண்டு அணிகள் மோதல்; நிர்வாகிக்கு ரத்தக்காயம் - நடந்தது என்ன?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14ம் தேதி) நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அண்மையில் பாஜக குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கடுத்த 4 நாட்களும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் ஆதரவு திரட்டி வருகின்றன அதிமுகவின் இரண்டு அணிகளும்.
 
அதிமுகவை பொறுத்தவரை யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது தான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான பதிலை, பேசித் தீர்க்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றைய தீர்மானக் கூட்டம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு தரப்புமே தனித்தனியாக தங்களுக்கான ஆதரவைத் திரட்ட முயன்று கொண்டிருந்த நிலையில், இன்று, சனிக்கிழமை காலை 10 மணியளவில் தன் ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ், நட்சத்திர விடுதி ஒன்றில் ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளியாயின.
 
அதற்கு முன்பு, இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு சென்று அவரைச் சந்தித்தார். பின்னார், ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓபிஎஸ் உடன் செல்லூர் ராஜு தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
கைகலப்பில் ரத்தக்காயம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஆனால், தொண்டர்கள் அவர்களுக்குள்ளாகவே இரண்டு அணிகளாகப் பிரிந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
 
வெளியில் நிலைமை இப்படி இருந்தபோது, உள்ளே இருந்து நிர்வாகி ஒருவர் ரத்தக்காயத்துடன் வெளியே வந்தார். பெரம்பூர் பகுதியின் நிர்வாகிகளில் ஒருவரான மாரிமுத்து என்றவர், சட்டையில் ரத்தக்கறைகளுடன் ஊடகங்களிடம் பேசியபோது "எடப்பாடி ஆளானு கேட்டு அடிக்கிறாங்க" என்று தெரிவித்திருந்தார்.
 
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என வந்து கொண்டே இருந்தனர். ஒவ்வொரு தலைவரின் வருகையின் போதும் அவர் தரப்பு ஆதரவுத் தலைவரின் பெயரைச் சொல்லி தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
 
ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க இன்றைய கூட்டம் நடைபெறும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட தலைவர்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
 
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் பொதுக்குழுவில் எழுந்தால் அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று முன்பே சொல்லிவிட்ட நிலையில், இன்றைய கூட்டத்திற்கு இதுவரை எடப்பாடி பழனிசாமி (மதியம் 12.30 வரை) வரவில்லை என்பது இந்த விவாகரத்தில் மேலும் கவனம் பெறுவதாக அமைகிறது.