செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2023 (15:31 IST)

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு வேலை செய்கிறார்களா? - உண்மை நிலவரம்

சமீபத்தில் ‘பரிதாபங்கள்’ என்ற பிரபல யூடியூப் சேனலில் வட மாநிலத் தொழிலாளர் குறித்த ஒரு கேலி வீடியோ ‘வடக்கு ரயில் பரிதாபங்கள்’ என்ற பெயரில் வெளியானது.

 
திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டியடித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலானது. ஆனால், அது தேநீர் கடையில் நடந்த தகராறின் விளைவு என்றும் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னை எதுவும் அதில் இல்லை என்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பெறும் சம்பளம் குறித்து சில நாட்களாக இருந்து வந்த சர்ச்சையும் பேசுபொருளாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூ. 100- 200க்கு வேலை செய்வதாகவும், தமிழர்கள் அதே வேலைக்கு ரூ. 1,000 வரை கூலி கேட்பதாகவும் கிண்டலாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

மிகக் குறைவான ஊதியமும் அன்றாட உணவும் வட மாநில தொழிலாளர்களுக்கு போதும் என்பதாகவும் அதனால் அவர்களையே தமிழ்நாட்டில் அதிகமாக வேலைக்கு எடுப்பதாகவும் இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் சித்தரித்திருந்த அந்த வீடியோ, இன்று வரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வசனத்தை வேறு பலரும் டப் செய்து புதிய வீடியோக்களை செய்து தங்கள் சேனல்களில் பகிர்கின்றனர். வேறு சிலர் பல்வேறு துறைகளுக்கென அதை மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட வீடியோ, வட மாநிலத்தவர்கள் குறித்தே எடுக்கப்பட்டிருந்தாலும், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். உண்மையில் வெளிமாநில தொழிலாளர்கள் இவ்வளவு குறைவான ஊதியத்திற்கு வேலை பார்க்கிறார்களா? தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில், ஆடை உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிமாநிலத்தவர்களுக்கும் அதே வேலையில் ஈடுபடும் தமிழர்களுக்கும் இடையே உள்ள ஊதிய வித்தியாசம் என்ன?

ஜார்க்கண்ட், ஒடிசா, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அதிகமான அளவில் வருகின்றனர். ஆரம்பத்தில் கட்டுமான தொழில், ஆடை உற்பத்தித் தொழிலில் மட்டுமே அனைத்து வேலைகளிலும் ஈடுபட்ட இவர்கள், தற்போது உணவகங்கள், செக்யூரிட்டி பணி, லிஃப்ட் ஆப்பரேட்டர் என, அனைத்து வித பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று, ஆரம்பத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் வேலை செய்துவந்த வெளிமாநிலத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர். இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) ஏப்ரல், 2022-இல் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் பெண்கள் 7.13 லட்சம் பேர், ஆண்கள் 27.74 லட்சம் பேர்.

"ரூ.100-200க்கு வேலை செய்வது இல்லை"
கட்டுமானம், ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவோரிடம், வெளிமாநில தொழிலாளர்களின் ஊதிய நிலைமை குறித்துப் பேசினோம். சென்னையில் செயல்பட்டுவரும் கேலக்சி டெகார்ஸ் என்னும் கட்டுமானத் துறை நிறுவனத்தைச் சேர்ந்த என்.தமிழரசு என்பவர் பிபிசி தமிழிடம் பேசினார். “ரூ. 100-200க்கு எல்லாம் யாரும் வேலை செய்வது இல்லை. ஆனால், கட்டுமான தொழிலில் வேலை செய்யும் தமிழர்களுக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கும் இடையே ஊதியத்தில் சிறு வித்தியாசம் இருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாங்கும் ஊதியத்தில் 70% ஊதியமே வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. உதாரணமாக, கட்டுமான தொழிலை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு ரூ. 800-850 வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அதனை நேரடியாக அவர்களிடம் தராமல் அவர்களை அழைத்துவரும் ஏஜெண்ட்டுகளிடம் வழங்குவோம். அவர்கள் 200-250 ரூபாய் வரை பிடித்துக்கொண்டு தொழிலாளர்களிடம் வழங்குவார்கள்” என்கிறார்.

ஊதியம் தவிர்த்து, கட்டுமான தொழில்கள் நடைபெறும் இடங்களில் தங்கி வேலை செய்பவர்களுக்கு உணவு சமைப்பதற்கான பொருட்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்குவதாகவும், அதை வைத்து தொழிலாளர்கள் சமைத்துக்கொள்வார்கள் என்றும் கூறுகிறார் தமிழரசு. தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிமாநிலத்தவர்களே என்கிறார் தமிழரசு.

"சிறிய ஊதிய வித்தியாசம் தான்"
திருப்பூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தித் தொழில் செய்துவரும் ராஜன் கூறுகையில், “ஆடை தொழிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இணையாகவே வெளிமாநில தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகின்றது. சில இடங்களில் ஊதிய வித்தியாசம் சிறிதளவே இருக்கும். இந்த தொழிலில் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒருநாள் ஊதியம் 1,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது” என்கிறார். 30 தொழிலாளர்கள் வரை வைத்து சிறிய அளவில் தொழில் செய்துவரும் ராஜனின் நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர்கள் யாரும் வேலையில் சேர்க்கப்படவில்லை.

“சிறிய நிறுவனம் என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். பெரிய நிறுவனங்களில் அப்படியில்லை. பாதிக்கும் மேலானோர் வெளிமாநிலத்தவர்களே” என்கிறார்.

அதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். சுப்பிரமணி என்பவர் கூறுகையில், “ஒருநாளைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஸ்திரி ரூ.1,000-1,100 வாங்குகிறார் என்றால், வெளிமாநில தொழிலாளர்கள் ரூ. 900 வாங்குகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உதவியாளர்கள் ரூ. 800-900 வாங்கினால், வெளிமாநிலத்தவர்கள் ரூ. 700 வாங்குகின்றனர். மிகக்குறைவான ஊதிய வித்தியாசமே இருக்கிறது” என்கிறார். இவருடைய நிறுவனத்தில் பணிசெய்யும் 30 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

"சுரண்டல் அதிகம்"
கடின உழைப்பு, நேரம் தவறாமை இவை இரண்டையும் வெளிமாநிலத்தவர்கள் கடைபிடிப்பதாக நிறுவனங்களின் தரப்பில் பேசியவர்கள் கூறுகின்றனர். இதுபோக, 8 மணிநேரத்தைக் கடந்து 12 மணிநேரம் வரைகூட வேலை செய்வது, வாரத்தில் ஒருநாள் மட்டுமே விடுப்பு எடுப்பது, பண்டிகை நாட்களில் விடுமுறை கேட்காதது, உரிமைகள் குறித்து கேட்பதற்கு சங்கம் இல்லாதது, பணியில் பாதுகாப்பின்மை நிலவினால் கேள்வி கேட்காதது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வெளிமாநிலத்தவர்களை அதிகம் பணியில் அமத்துவதாக, நிறுவனங்கள் தரப்பில் கூறுகின்றனர். மேற்கண்ட காரணங்கள் அனைத்தும் வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான சுரண்டலே என்கிறார், தொழிலாளர் நல வழக்குகளை கையாண்டு வரும் வழக்குரைஞர் பிரதாபன் ஜெயராமன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வெளிமாநில தொழிலாளர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதாலேயே சுரண்டல் அதிகமாக நடப்பதற்கு வழிவகுக்கிறது. தமிழர்கள் நியாயமான கூலி கேட்கும் விழிப்புணர்வை அடைந்திருக்கின்றனர். வட மாநிலத்தவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களில் வாழ்வாதாரம் இன்மையால், குறைவான ஊதியமே போதுமானதாக இருப்பதாக கருதுகின்றனர். உண்மையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவான சம்பளமே வெளி மாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஒருநாளைக்கு 12 மணிநேரம் கடந்தும் அவர்கள் வேலை செய்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் அவர்களை பதிவு செய்ய வேண்டும். அது முறையாக நடைபெறுவதில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பதை ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்ய வேண்டும். அதனை நிறுவனங்கள் செய்வதில்லை. இதனால் அவர்களை சுரண்டுவது மிக எளிதாக இருக்கிறது. அவர்களின் பாதுகாப்புக்கென சங்கங்கள் இல்லை. வீட்டு வேலைக்காக வரும் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களும் கண்காணிக்கப்படுவதில்லை” என்றார். "வைரலான வீடியோவில் வருவதுபோன்று 100 ரூபாய்க்கு வேலை செய்வதெல்லாம் மிக மிக அரிது. சில இடங்களில் வேலையைப் பொறுத்து அத்தகைய குறைவான சம்பளம் இருக்கலாம்" என்கிறார் பிரதாபன்.

தமிழ்நாட்டுக்கு வருவது ஏன்?
சென்னையில் 22 ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெய்ஸ்வால் பிபிசி தமிழிடம் கூறுகையில், “கட்டுமான தொழில்களில் ஒருநாளைக்கு எங்களுக்கு ரூ.850 வரை சம்பளம் கிடைக்கிறது. கட்டுமான தொழிலில் அனைத்துவிதமான வேலைகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றார். கட்டுமான தொழிலில் பல்வேறு வேலைகள் செய்து தற்போது மேஸ்திரியாக உள்ளார் இவர். கட்டுமான தொழில்களுக்கு வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் ஏஜெண்ட்டாகவும் இருக்கிறார். 50 ரூபாய் கமிஷன் பிடித்துக்கொண்டே தொழிலாளர்களுக்கு மீத ஊதியத்தை வழங்குவதாக கூறுகிறார் அவர். தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் புலம்பெயர்வது குறித்து கேட்டபோது, “வட மாநிலங்களில் வேலையில்லை. அதனால் தான் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறோம்” என, தெரிவித்தார் ஜெய்ஸ்வால். “வெளிமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில குடியிருப்புகளில் பெரும்பான்மையாக வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் ‘எங்களுக்கே வேலை கொடுங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள்’ எனக் கூறுகின்றனர் என்றார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன்.