நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.
விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றை மீறி அவர்கள் வெற்றி பெறுவது ஆகியவற்றைப் பின்னணியாக வைத்து தமிழில் 'கனா', 'ஜீவா' என பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றுமொரு படம்தான் இந்த 'க்ளாப்'.
ஒர் ஓட்டப்பந்தய வீரனாக சாதிக்க விரும்பும் கதிருக்கு (ஆதி) ஒரு விபத்தில் கால் அகற்றப்பட்டு விடுகிறது. இதனால் வாழ்வில் பிடிப்பில்லாமல் இருக்கும் கதிர், வேறு காரணங்களால் முடங்கிப் போயிருக்கும் பாக்கியலட்சுமி (கிரிஷா குரூப்) என்ற வீராங்கனையை எப்படி தேசிய சாம்பியனாக்குகிறான் என்பதுதான் படத்தின் கதை. இன்னொரு பக்கம் கதிருக்கும் அவனுடைய மனைவி மித்ராவுக்கும் இடையிலான உறவுச் சிக்கல்கள் விவரிக்கப்படுகின்றன.
விளையாட்டுகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களில் ஒரு வீரர் எப்படி பயிற்சி பெற்று சாதிக்கிறார் என்பதை மையமாக வைத்து படமெடுப்பது ஒரு வகை. அதேபோல, விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு பெறவும் நடத்தும் போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்கள் இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகைப் படங்கள் கூடுதல் சுவாரஸ்யமானவை. இந்தப் படம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
ஆனால், இந்தியாவின் விளையாட்டு அமைப்புகளுக்கே உரிய அரசியல், ஜாதி, அந்த அமைப்புகளில் உள்ள ஆழமான பிரச்னைகளைப் பேசாமல், இரு தனிநபர்களுக்கு இடையிலான பகையை முன்வைத்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் பிருத்வி ஆதித்யா.
படம் துவங்கியதிலிருந்து ஒரே சீரான வேகத்தில் சென்று, எதிர்பார்த்தவகையில் முடிகிறது. எந்த இடத்திலும் தொய்வே இல்லை என்பது இந்தப் படத்தின் பலம். அதேபோல, எந்த இடத்திலும் தீவிர உச்சத்தையும் படம் எட்டவில்லை. கதிருக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை மனைவியின் பார்வையிலேயே சொல்ல வைத்திருப்பது நன்றாக இருக்கிறது.
படத்தில் நடித்திருப்பவர்களில் ஓட்டப்பந்தைய வீராங்கனையாக வரும் கிரிஷா குரூப் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் நாயகி ஆகான்ஷா சிங் பிடிக்கிறார். நாயகனாக வரும் ஆதி, காலை இழந்த பிறகு phantom limb பிரச்சனையால் தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
படத்திற்கு இசை இளையராஜா. நீண்ட நாட்களுக்குப் பிறகு காதிற்கு இனிய பின்னணி இசை அமைந்திருக்கிறது. பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லையென்றாலும், கதையோட்டத்தோடு பாடல்கள் வருவதால் நன்றாகவே இருக்கின்றன.
எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத திரைக்கதை இந்தப் படத்தின் பலம். ஆனால், வீரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆழமாகச் சொல்ல முற்படாமல் தனிப்பட்ட பகைக்குள் சுருக்கியிருப்பது பலவீனம்.
ஆனால், நிச்சயமாக ரசிக்கக்கூடிய, விறுவிறுப்பான படம்தான் இந்த க்ளாப்.