கொரோனா பொது முடக்கத்துக்கு மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள சீன வர்த்தகம்
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் முக்கிய உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், வர்த்தகத்தில் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது சீனா.
அதிகாரப்பூர்வ தகவல்படி செப்டம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 9.9 சதவீத அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல இறக்குமதிகள் 13.2 சதவீத அளவு உயர்ந்துள்ளது.
பல முக்கிய உலக நாடுகளின் பொருளாதாரம், கொரோனா பொது முடக்கத்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதாலும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆனால் இந்த அதிகாரப்பூர்வ தகவல், சீனா வேகமாக மீண்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது.
கடந்த வருடம் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சீனாவில்தான்.
உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா. ஆனால் சீனாவின் பொருளாதாரம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான பொது முடக்கத்தால் பாதிப்படைந்தது. பின் ஜூன் மாதம் அது சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.
ஜூன் மாதத்திலிருந்து சர்வதேச அளவில் வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள், மருத்துவ கருவிகள், ஆடைகள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்ததால் சீனாவின் வர்த்தகம் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இருப்பினும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த தேவையின் அளவு குறையவும் செய்யலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.