6 மாதங்களை நிறைவு செய்யும் உக்ரைன் – ரஷ்யா போர்! – 1.50 கோடி மக்களின் கதி என்ன?
இந்த ஆண்டின் மிகப்பெரும் போர் அழிவாக கருதப்படும் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் அதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. தொடர்ந்து இரு நாடுகளிடையே சமரசமற்ற நிலையில் நீடித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போரை தொடங்கியது.
ஆரம்பத்தில் உக்ரைன் அரசை அடிபணிய வைப்பது மட்டுமே நோக்கம் என்றும், உக்ரைனின் ராணுவ தளவாடங்களை மட்டுமே தாக்குவதாகவும் கூறி வந்த ரஷ்யா மக்கள் குடியிருப்பு பகுதிகளையும் தாக்க தொடங்கியது. இதனால் உக்ரைனில் இருந்து பிற நாட்டு மக்கள், மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக சொந்த நாடுகளை சென்றடைந்தனர்.
உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக அடைக்கலம் தேடி அண்டை நாட்டு எல்லைகளை கடக்க தொடங்கினர். தனது சிறிய ராணுவத்தைக் கொண்டு ரஷ்யாவை எதிர்த்து வந்த உக்ரைன் உலக நாடுகளின் ஆதரவை கோரியது. பெயரளவில் எதிர்ப்பை மட்டுமே பல நாடுகள் பதிவு செய்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியது.
தொடர்ந்து நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பு ராணுவத்தினரும் பலியாகியுள்ளனர். உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கி அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்றுடன் இந்த போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் போர் நிறுத்தத்திற்கான சாதகமான பேச்சுவார்த்தைகள் எதிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் சுமார் 1.50 கோடி மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.