சீனாவில் வறுமையை அகற்றும் பழங்கால கைவினை தொழில்
உள்ளூர் தொடங்கி உலகெங்கிலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதை நாம் அறிவோம். சில ஊர்கள் சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றிருக்கும். சில ஊர்கள் உணவுப் பொருட்களுக்கு பெயர் பெற்றிருக்கும் சில ஊர்கள் கலைநயம் மிக்க கைவிணைப் பொருட்கள், சிற்பங்களுக்கு பெயர் பெற்றிருக்கும் அந்த வகையில் சீனாவின் சின்ச்சியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்கூர் இனமக்களின் புகழ்பெற்ற, பாரம்பரியமான கைத்தறி கம்பளம் உலகப் புகழ் பெற்றது என்றால் மிகையில்லை.
சின்ச்சியாங்கின் ஹேத்தியன் கம்பளம் உய்கூர் இன மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஹேத்தியன் உய்கூர் கம்பளத்தின் பிறப்பிடமாகவும், தரைவிரிப்பு உற்பத்திக்கான மையமாகவும் இது திகழ்கிறாது.
பாரம்பரிய கைவினைப்பொருட்களைக் கொண்ட நாட்டுப்புற கலைஞர்களால் விரிவாக தயாரிக்கப்பட்ட, உய்குர் கம்பளம் மிகுந்த வரவேற்பை கொண்டது. தனித்துவமான தேசிய அம்சங்கள் மற்றும் வலுவான உள்ளூர் வண்ணங்களுடன், உய்குர் கம்பளம் நெய்யப்படுகிறது. உய்குர் நாட்டுப்புற மக்களால் நெய்யப்படும் இந்த கம்பளம் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.யூச்சியன் வட்டத்தில் இந்த கம்பளம் தயாரிக்கும் மையத்திற்கு நேரில் சென்று அம்மையத்தை நீண்ட காலமாக நடத்திவரும் பெண்மணி மங்லை சி ஹன் என்பவரை நேரில் சந்தித்து கேட்ட போது அவர் கூறியதாவது :
குழந்தை பருவம் முதலே பூத் தையல் கலையில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 2005 ஆம் ஆண்டில் ஒரு சிறிய தொழில் பட்டறை ஒன்றை நடத்தி வந்தேன். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் இந்த தொழில் மையத்தை நிறுவி 11 ஆண்டுகளாகநடத்தி வருகிறேன். தொடக்கத்தில் எனக்கு பொருளாதார சிக்கல்கள் இருந்தன. அதன் பின் அரசு மாநியம் கிடைக்கப்பெற்றேன்.
எனது தொழில் மையத்தில் தேநீர் மேசை விரிப்பு, கம்பளம், ஆடைகள், தொப்பி, பொம்மை உள்ளிட்ட பொருட்களை உய்கூர் இன மக்களின் பாணியில் மிகச்சிறப்பாக செய்து வருகிறோம். 15 முதல் 25 வரையிலான ஊழியர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். உள்ளூர் பெண்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இங்கு வந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுக்கிறது. எங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் எங்கள் மையத்தில் திருமண ஒப்பனை அறை ஒன்று வைத்துள்ளோம். இங்கு மணமகளுக்கான அலங்காரம் இலவசமாக செய்யப்படுகிறது என்று கூறினார். தெற்கு சின்ச்சியாங்கின் ஹேத்தியன் பகுதியில் வசிப்பவர்கள் குறைந்தது 2,000 ஆண்டுகளாக தரைவிரிப்புகளை நெசவு செய்து வருகின்றனர், இந்த பழங்கால கைவினை தொழில் அங்குள்ள மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் தங்களை வறுமையிலிருந்து விடுவித்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
இந்த மாகாணத்தில் 157 தரைவிரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன, இது 1, 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. தொழிலாளர்களில் 95 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமலை சோமு