1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (06:09 IST)

மலேசிய தேர்தல் முடிவில் திடீர் ஆச்சரியம்: எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது

மலேசிய பாராளுமன்றத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தகவலை மலேசிய தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
 
மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து நேற்று அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கு நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 60% வாக்குப்பதிவு நடந்ததாக மலேசிய தேர்தல் கமிஷன் அறிவித்தது.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டதில், எதிர்க்கட்சி கூட்டணியான மகாதிர் முகமதுவின் கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். 
 
இந்த தேர்தலில் மலேசிய பிரதமர் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் எதிர்க்கட்சி கூட்டனியின் தலைவர் மகாதிர் முகம்மது ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியை கைப்பற்றிய மகாதிர் முகம்மது விரைவில் புதிய மலேசிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.