செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (11:12 IST)

அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு

வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

 
புதின் வருகைக்கான விவாதங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்பின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ்.
 
ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று பொருள் தரும் வகையில் டிரம்ப் அளித்த ஒரு பதில் அமெரிக்காவில் அவரை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். ஒரு வார்த்தை மாறிவிட்டது என்றார். ஆனால், அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
 
அதற்கு அடுத்த நாள் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் மீண்டும் ரஷ்யா குறித்த அவரது கருத்துதான் என்ன என்ற குழப்பத்தை உண்டாக்கியது. இந்தப் பிரச்சனை கிளப்பிய புழுதி அடங்குவதற்குள், தற்போது புதினை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் டிரம்ப்.
 
ஆனால், இரண்டாவது புதின்-டிரம்ப் சந்திப்பு குறித்து ரஷ்யா இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
 
இதனிடையே, சர்ச்சைகளால் ஹெல்சின்கி உச்சி மாநாடு பிரபலமடைந்துவிட்டாலும், மாநாட்டில் இரு தலைவர்களும் பேசியது என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால், மக்களின் உண்மையான எதிரிகளைத் தவிர, போலிச் செய்தி வெளியிடும் பத்திரிகைகளைத் தவிர மற்றவர்களுக்கு அந்த மாநாடு பெரும் வெற்றி என்று தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
 
பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை செயல்படுத்துவதற்கு இரண்டாவது சந்திப்பை தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 
ஹெல்சின்கி செய்தியாளர் சந்திப்பில் இருந்தே டிரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர் அமெரிக்க செனட் அவையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷும்மர், தற்போது புதினுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது குறித்து கருத்துக் கூறிய அவர், "ஹெல்சின்கியில் நடந்த அந்த இரண்டு மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நாம் அறியும் முன்பாக டிரம்பும் புதினும், அமெரிக்காவிலோ, ரஷ்யாவிலோ, வேறெங்குமோ தனியாக சந்தித்துப் பேசக்கூடாது," என்றார்.
 
அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு இயக்குநர் டான் கோட்சுக்கு இந்த அழைப்பு ஆச்சரியம் அளித்துள்ளது. கொலராடோவில் உள்ள 'ஆப்சன் செக்யூரிட்டி ஃபோரம்' என்ற அமைப்பில் ஒரு நேரலை நேர்க்காணலில் பேசிக்கொண்டிருந்த அவரிடம் இந்த விஷயம் சொல்லப்பட்டபோது அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் "இது சிறப்பான ஒன்றாக இருக்கப்போகிறது".
 
டிரம்பும் புதினும் ஹெல்சின்கியில் தனியறையில் பேசிய போது அவர்களோடு அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். எனவே, அங்கே என்ன பேசப்பட்டது என்று தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.