செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2024 (11:40 IST)

ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!! சுனாமி எச்சரிக்கை வாபஸ்..!!

japan earth
ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
ஜப்பானின் நேற்று இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது.  அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.
 
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை எழலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. 
 
இந்நிலையில் ஜப்பான் நேரப்படி செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் சுனாமி எச்சரிக்கையை அரசு வாபஸ் பெற்றது.  என்றாலும் கூட கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் உள்ளன. அதனால் மக்கள் கடல் சார் பணிகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணாங்களில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 129 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது சேதங்களை கணக்கிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது