போரை நிறுத்தாத இஸ்ரேல்..! 23 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை!
காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர் யுத்தம் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பலரை பணையக்கைதிகளாக பிடித்து வந்த நிலையில், காசாவிற்கு வான்வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இடையே ஒரு வார காலம் ஏற்பட்டிருந்த போர் நிறுத்தத்தின்போது பணையக்கைதிகளும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் தொடங்கிய போரில் இஸ்ரேல் ராணுவம் காசாவின் பல பகுதிகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. உலக நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மேற்கொண்டபோதும் அதை புறம் தள்ளி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
87வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 21,978 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக இந்த போரால் 23,436 பேர் உயிரிழந்துள்ளனர்.
Edit by Prasanth.K