1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:37 IST)

கொரோனா வைரஸ்: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை
 
 
சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 
2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் உலகெங்கும் பேசுபொருள் ஆனது.
 
வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழலில் தற்போது ஏழு பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் உள்நாட்டிலேயே நோய் பரவல் நிகழ்ந்துள்ளது.
 
கடந்த பல மாதங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மட்டுப்பட்டு இந்த சூழலில் கடந்த 10 நாட்களில் சுமார் 300 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சீனாவில் உள்ள 15 மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது.
 
கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்?
கொரோனா தடுப்பூசி போட்டால் ஆயுள் முழுக்க வைரஸ் பாதிக்காதா?
கொரோனா வைரஸ் திரிபுகளிலேயே மிகவும் எளிதில் பரவக்கூடிய தன்மை உடைய 'டெல்டா' திரிபு மற்றும் உள்நாட்டு சுற்றுலா காலம் தொடங்கியுள்ளது ஆகியவை தற்போதைய வைரஸ் பரவலுக்கு காரணம் என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
செவ்வாய்க்கிழமை மட்டும் சீனாவில் 90 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 51 பேருக்கு நாட்டுக்குள்ளேயே கோவிட் உண்டாகியுள்ளது என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது. திங்களன்று 55 பேருக்கு சீனா முழுவதும் உள்நாட்டில் இருப்பவர்கள் மூலம் தொற்று உண்டானது உறுதிசெய்யப்பட்டது.
 
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் பரவும் தொற்று
 
தங்கள் நாட்டு எல்லைக்குள்ளேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை சீனா பெருமளவு வெற்றிகரமாக செய்து முடித்திருந்தது.
 
ஆனால் தற்போதைய தொற்று, சீனாவில் உள்ள நான்ஜிங் நகரத்திலுள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் மூலம் முதன் முதலில் தெரிய வந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்குள்ள 92 லட்சம் மக்களுக்கும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திய அரசு, பல்லாயிரம் பேர் வசிக்கும் பகுதிகளில் பொது முடக்கத்தையும் அமல்படுத்தியது.
 
ஆனால் சென்ற வார இறுதியில் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான சாங்ஜியாச்சியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான்ஜியாங் நகரத்துக்கு வந்த பயணிகள் இங்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
 
சாங்ஜியாச்சியில் உள்ள ஒரு கலைக் கூடத்துக்குச் சென்ற சுமார் 5 ஆயிரம் பேரைக் கண்டறியும் முயற்சிகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்தக் கலைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.
 
சாங்ஜியாச்சி நகரம் இப்போதைய பரவலின் ஆரம்பப் புள்ளியாக என்று சீனாவின் முன்னணி சுவாசக் கோளாறுகள் சிகிச்சை நிபுணர் ஜூங் நான்ஷான் தெரிவித்துள்ளார்.
 
இப்போதைய பரவல் தலைநகர் பெய்ஜிங்கையும் சென்றடைந்துள்ளது. உள்நாட்டில் இருப்பவர்கள் மூலம் பலருக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது இங்கும் உறுதியாகியுள்ளது.