கர்ப்பிணி பெண்ணை கொன்று வயிற்றை அறுத்து குழந்தை திருட்டு
அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொன்று குழந்தையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியை சேர்ந்த மார்லன் ஓச்சா (வயது 19). நிறைமாத கர்ப்பிணியான இவரை ஏப்ரல் 23ம் தேதியிலிருந்து காணவில்லை. இந்நிலையில் 46 வயது கிளாரிஸ் என்ற பெண் ஒருவர் தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், அது அசைவில்லாமல் இருப்பதாகவும் மருத்துவமனைக்கு அவசரமாக போன் செய்துள்ளார். குழந்தையை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டுவந்த டாக்டர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் போன் செய்த கிளாரிஸின் செயல்பாடுகளில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் டி.என்.ஏ வை பரிசோதித்த மருத்துவர்கள் அது அந்த கிளாரிஸோடோ, அவரது கணவரோடோ ஒத்துபோகவில்லை என்பதையறிந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீஸார் விசாரணைக்காக கிளாரிஸின் வீட்டிற்கு வந்து சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கிளாரிஸ், அவரது கணவர், மகள், மகளுடைய காதலன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் தாய்மார்களுக்காக செயல்படும் பேஸ்புக் குழுவில் மார்லன் ஓச்சாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆடைகள் தருவதாக மார்லனை வர சொல்லி, அவர் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு, வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்ததாகவும் கிளாரிஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த படுபாதக கொலை சம்பவம் வாஷிங்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.