1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (14:58 IST)

கத்தோலிக்க மதகுருக்கள் மீது பாலியல் வழக்கு: வாட்டிகனில் முதல்முறை

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வாட்டிகனில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வாட்டிகனில் உள்ள சமயப் பள்ளிக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இதுகுறித்து கருத்து எதையும் வெளியிடவில்லை. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது இதற்கு முன்பும் பல்வேறு முறை பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் வாட்டிகன் நகரிலேயே பாலியல் அத்துமீறல் குறித்த விசாரணை நடைபெறுவது இதுவே முதல் முறை.