Top Slip to Parambikulam | டாப் ஸ்லிப் முதல் பரம்பிக் குளம் வரை
– அழியாத இயற்கை அழகு!
|
தமிழ்நாட்டின் பசுமை மாவட்டமான கோவையில் தென்னஞ் சோலைகளுக்கு இடையே செல்லும் பாதையில் 30 கி.மீ. பயணித்து டாப் ஸ்லிப் மலை வனப் பகுதியின் அடிவாரத்தை அடையலாம். அங்குள்ள சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்குப் (குடிமக்கள் கவனிக்க) பின் மலைப் பாதையில் மேலேறத் துவங்கியதுமே பல வன விலங்குகளைக் காணலாம்.
சிங்க வால் குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி ஆகியன பாதைக்கு அருகிலேயே திரிவதைக் காணலாம். மலபார் அணில் என்றழைக்கப்படும் பெரிய வகை அணில் - இவர் ஒரு மரத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலுள்ள இன்னொரு மரத்திற்குத் தாவுவதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக மரக்கிளையில் வசதியாக படுத்து ஒய்வெடுக்கும் நிலையிலேயே இவரைக் காண முடியும்.
ஒரு மணி நேர மலைப் பயணத்திற்குப் பிறகு (மீ்ண்டும் ஒரு சோதனை சாவடி, சோதனையைத் தாண்டி) டாப் ஸ்லிப்பைத் தொடுவோம். நம் கண் முன்னே விரியும் பரந்த பசுமைப் புல்வெளி. அந்தி சாயும் நேரத்தில் இங்கு கூட்டம் கூட்டமாக மான்களைக் காணலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் டாப் ஸ்லிப் வனப் பகுதி மிகவும் கவனமாக பராமரிக்கப்பட்டு செழிப்புடன் உள்ளது. ஞெகிழி (பிளாஸ்டிக்), ஸ்டீரியோ இசை ஆகியவற்றிற்குத் தடை செய்து விலங்கினங்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. பரந்த புல்வெளியுடன் துவங்கும் இந்த வனப் பகுதி இந்திரா காந்தி தேச உயிரி பரவல் பூங்காவின் (National Bio-diversity Park) ஒரு அங்கமாக உள்ளது.
|
|
இரண்டு, மூன்று கி.மீ. தூரத்தில் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் குடில்களில் தங்கினால், மாலை 7 மணி முதல் பல விலங்குகள் சுதந்திரமாக உலவுவதைக் காணலாம். வனத் துறையினர் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த விளக்குகள் (Focus Lights) இருந்தால் தூரத்தில் உலவும் விலங்குகளைக் காணலாம். இரவு நேரத்தில் வெளியில் இருந்து விலங்குகளை தரிசிக்க முயற்சிப்பை ஆபத்தான சிக்கலாகிவிடும், எச்சரிக்கை.
தமிழக வனத்துறையினர் இங்கு உருவாக்கி பராமரித்துவரும் மூலிகைப் பண்ணையை மறக்காமல் சென்று பாருங்கள்.
பரம்பிக் குளம் நோக்கி!
டாப் ஸ்லிப்பில் துவங்கும் இந்த வனப்பகுதியின் பெரும் பகுதி கேரளத்தின் எல்லைக்குட்பட்டதாக உள்ளது. 5 கி.மீ. தூர சாலைப் பயணத்திற்குப் பின், கேரள எல்லையில் அமைந்துள்ள வன - சுற்றுலா அலுவலகத்தை அடையலாம்.
|
இங்கிருந்து 30 கி.மீ தூரம் பயணம் செய்து வனத்தின் மையத்திலுள்ள பரம்புக் குளம் அணைக்கட்டை அடையலாம். இடைப்பட்ட பயண தூரம் முழுவதும் வனம்தான்!
நீங்கள் உங்களது சொந்த அல்லது வாடகை வாகனத்துடன் சென்றாலும், கேரள வனப் பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. எல்லையில் உள்ள வன அலுவலகத்தில் இருந்து இதற்கென்று சேவையில் உள்ள பேருந்துகளில்தான் உள்ளே செல்ல முடியும்.
இதற்கு ஒருவருக்கு ரூ.30.00 கட்டணம் வசூலிக்கிறது கேரள வனத்துறை. அந்த சிற்றுந்தில் 12 பேர் வரை பயணிக்கலாம். பேருந்தில் வரும் வழிகாட்டி வனத்தில் தென்படும் விலங்குகளை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விளக்குகிறார். சத்தம் எழுப்பாமல் (விலங்குகளை தொந்தரவு செய்யாமல்) பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
கேரள எல்லையில் இருந்து பரம்பிக் குளம் செல்லும் 30 கி.மீ. தூரப் பாதையும் அடர்ந்த வனப் பகுதியாகும்.
இந்த வனப் பகுதியில்தான் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை அணைகள் கட்டி தமிழ்நாட்டிற்கு திருப்பி, அதனை விவசாயத்திற்கும் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுத்துகிறது தமிழ்நாடு. இதற்காக கட்டப்பட்டுள்ள அணைகளே பெருவாரிப் பள்ளம், துணக்கடவு, பரம்புக் குளம் அணை ஆகியன.
பரம்பிக் குளம் அணையினால் தேங்கும் தண்ணீர் சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள காடம்பாறை நீரேற்று மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கீழ்பவானி, மேல்பவானி உள்ளிட்ட குந்தா நீர் மின் திட்டத்திற்குப் பிறகு பல அணைகளை கட்டி நீரை திருப்பி மின் தயாரிக்கும் திட்டமே பரம்பிக் குளம் - ஆழியாறு - பாண்டிப் புழா நீர் மின் திட்டமாகும்.
|
கேரளத்தின் வனப் பகுதிக்கும் சென்று தங்கும் வசதி உள்ளது. இரு வனப் பகுதிகளிலும் வனத்திற்குள் சென்று வர யானை சவாரி வசதி உள்ளது.
டாப் ஸ்லிப் வனப் பகுதியில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய யானை வளர்ப்பு மையங்களில் ஒன்று உள்ளது. இங்கு 19 யானைகள் வளர்க்கப்படுகின்றன.
சுவராஸ்யமான தகவல்களுடன் அடுத்த வாரம்...யானைப் பற்றி.
