திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (17:52 IST)

வண்ண வண்ண வீடுகள் வாஸ்துவா?

கேள்வி:  தற்பொழுது வீடுகள், அலுவலகங்கள் எல்லாம் கலர் கலராக இருக்கிறது. இவை யாவும் வாஸ்து தொடர்புடையது என்கிறார்கள். எதற்காக இந்த மாதிரி வண்ணமயமாக்குகிறார்கள்?  

 
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: வண்ணங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய சக்தியாக இருக்கிறது. சில நிறங்களை நாமே பார்த்திருக்கிறோம். சில நிறங்கள் சிலவற்றின் அடையாளம். கருப்பு என்றால் துக்கம், சிவப்பு என்றால் முன்பு அபாயம், இப்போது எய்ட்ஸ் என்று பொதுவாக குறிக்கப்படுகிறது.    
 
சாதாரணமாக ஜாதகத்தில் என்னென்ன கிரகங்கள் அதிபதியாக இருக்கிறதோ அதற்குரிய நிறங்கள் பயன்படுத்தும் போது கோபதாபங்கள் கொஞ்சம் குறையும். காம விருப்பம் இல்லாமல் இருக்கிறார். மிகவும் விரும்பி வருகிறார், ஆனால் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறார் என்று சொல்லக்கூடிய கணவன், மனைவி ஜாதகத்தையெல்லாம் பார்த்துவிட்டு வீட்டின் வண்ணத்தை, குறிப்பாக படுக்கையறை வண்ணத்தை மாற்றுங்கள் என்றும், இந்த வண்ணச் சுவர் இருக்கிற மாதிரி படுக்கையறையை மாற்றிப் பாருங்கள். சில குறிப்பிட்ட பொருட்கள் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறுகிறோம். அதனால் பலன் ஏற்பட்டது என்றும், இப்பொழுது ஈடுபாடு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.    
 
அதேபோல, பிள்ளைகளுடைய படிப்பு அறையை சில மாற்றங்கள் செய்யுங்கள் என்று சொன்ன பிறகு, இப்பொழுது கூடுதல் நேரம் படிக்கிறான் என்று சொல்கிறார்கள்.    
 
புதன் பச்சை நிறத்திற்குரிய கிரகம். புதன் யாருடன் சேர்த்திருக்கிறது என்றும் பார்க்கவேண்டும். புதன் நன்றாக இருக்கிறது என்றால் உடனே பச்சையை வைத்துக் கொள்ளக்கூடாது. புதன் குருவுடன் சேர்ந்திருந்தால் இளம் பச்சை. புதனும் சனியும் சேர்ந்தால் பிஸ்தா கிரீன். புதனும் ராகுவும் இருந்தால் ஆலிவ் கிரீன். இதுபோன்று நுணுக்கமாகப் பார்க்க வேண்டும். இதுபோன்று பார்த்து வீடுகளுக்கு நிறங்களை அடித்தால் நல்லது.    
 
ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவருடைய வீட்டிற்கு ஒவ்வொரு முறையும் கலரை கேட்டுவிட்டு மாற்றுகிறார். அந்தரத்திற்கெல்லாம் கூட மாற்றுகிறேன் என்று சொன்னார். வேண்டாம் இது அதிகம். அதுமாதிரியெல்லாம் மாற்றாதீர்கள் என்று சொன்னேன். பிறகு நீங்க பிரித்துக் கொடுங்கள். அது ஒன்றும் எனக்கு பெரிய செலவு இல்லை என்று சொல்கிறார். சுக்ரன் அந்தரத்திற்கு ரோஸ் கலர். சூரியன் அந்தரத்திற்கு கொஞ்சம் மெரூன் கலந்த நிறம். பிறகு சந்திரன் அந்திரம் இப்படி இருக்கிறது.    
 
ஆனால் சூரியன் அந்தரம் என்பது 45 முதல் 50 நாள்தான் இருக்கும். அந்த 50 நாட்களுக்கு ஒருமுறை என்று கலரை மாற்றிக் கொண்டிருந்தார். பிறகு சொன்னேன், ஒரு புக்தி மட்டும் மாற்றுங்கள். சுக்ர புக்தி என்றால் இரண்டே முக்கால் வருடம். அடிக்கடி மாற்றாதீர்கள்.  
 
அப்படி மாற்றினாலும் வைப்ரேஷன் மாறும். உடல்நிலை பாதிக்கும். வெவ்வேறு வண்ணங்களுடைய பிரதிபலிப்புகள், அதிர்வுகள் நமது உடலில் நோயை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். அதன்படி செய்து நல்ல பலனை கண்டு வருகிறார். எனவே வண்ணங்களுக்கும் நம் வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் இருக்கிறது. ஆனால் சரியான ஆலோசனை பெற்றுச் செய்ய வேண்டும்.