வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (01:37 IST)

அசோக்குமார் மரணத்தால் புரட்சி வெடித்துள்ளது: விஷால்

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் இறுதிச்சடங்கு நேற்றிரவு மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால், அமீர் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், கந்துவட்டிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஆவேசமாக பேசினார். அவர் கூறியுள்ளதாவது:





அசோக்குமார் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் அனைவருக்கும் தெரியும். கந்துவட்டியினால் பொதுமக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். தற்சமயம் தயாரிப்பாளார் பலி ஆகியுள்ளார். சக தயாரிப்பாளராகக் கடன் வாங்கித் தொழில் செய்பவனாகச் சொல்கிறேன். திரைப்பட உலகில் இதுதான் கடைசி மரணமாக இருக்கும். இந்த மாதம் வட்டி கட்ட முடியவில்லையென்றால் எங்கேயும் ஓட மாட்டோம். அடுத்த மாதம் செலுத்துவோம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகச் சொல்கிறேன்... கந்து வட்டிக்குக் கொடுத்து விட்டு மிரட்டினால் இனி சும்மா இருக்க மாட்டோம். போலீஸை நாடுவோம். உறுதியாகச் சம்பந்தபட்டவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவோம். இந்தப் பட்டியலில் கெளதம்மேனன், பார்த்திபன் நான் உட்பட பலர் உள்ளோம். வெற்றுப்பத்திரத்தில் கையெமுத்துப் போட்டுள்ளோம். அன்பு செழியனுக்குச் சாதகமாக எம்.எல்.ஏ., வந்தாலும். அமைச்சர் வந்தாலும் விட மாட்டோம்.

இதுவரை அன்புச் செழியன்  கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அரசு சரியாக நடக்குதா இல்லையா என்பதைப் பார்ப்போம். முறையாக இந்த விஷயத்தில் முதல்வரைச் சந்திப்போம். எந்த அமைப்பிலும் ஒரு மரணத்துக்குப் பின்னால் புரட்சி வெடிக்கும். இப்போது எங்களிடம் வெடித்துள்ளது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஒன்று சேர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அசோக்குமார் தற்கொலை மூலம் சினிமாத் துறையில் உள்ள கந்துவட்டிக் கொடுமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி படம் பண்ணும் யாருக்கும் ரெட் கார்டு, லொட்டு லொசுக்கு எதுவும் வரக் கூடாது"

இவ்வாறு விஷால் ஆவேசமாகப் பேசினார்.