திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (18:35 IST)

நடிகர் விஜய்யின் தந்தைக்கு முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடந்த திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்  கலந்து கொண்டார். 


அப்போது பேசிய அவர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என்று சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது மத உணர்வு புண்படுத்தியாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனால் இயக்குனர் சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.