கருணாகரனை போனில் மிரட்டிய விஜய் ரசிகர்கள் யார்-யார்? போலீஸ் விசாரணை..
சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் ‘சர்கார்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சொன்ன அரசன் பற்றிய குட்டிக் கதையை மேற்கோள் காட்டி ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டு இருந்தார். அதில், அரசியல் வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல் வாதிகளுக்கு மட்டுமானதா? இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று அதில் கூறி இருந்தார்.
இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். விக்கிபீடியாவில் உள்ள கருணாகரன் பற்றிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்து, கருணாகரனை ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்றனர். இதற்கு பதில் தரும் வகையில் கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா? என்று முட்டாள் தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்று கேட்டுள்ளார்.
கருணாகரனின் இந்த பதில்கள் விஜய் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள்.
இதற்கிடையே விஜய் ரசிகர்கள் சிலர் கருணாகரனுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து கருணாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
எந்தெந்த செல்போனில் இருந்து மிரட்டல் வந்தது என்பது பற்றியும் கருணாகரன் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கருணாகரனை போனில் மிரட்டிய விஜய் ரசிகர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.