தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானதை அடுத்து, திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், டப்பிங் கலைஞராகவும் விளங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார்.
மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது ராமாபுரம் இல்லத்தில் காலமானார். மறைந்த டெல்லி கணேஷுக்கு வயது 80.
டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1976 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வருவதற்கு முன்பு, இந்திய விமானப்படையில் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டினப் பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான டெல்லி கணேஷை கே. பாலச்சந்தர் அறிமுகம் செய்தார். பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான இந்தியன் 2 உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும், அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva