வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (09:43 IST)

ஆஸ்கர் வென்ற பாராசைட் படத்தை கேலி செய்த ட்ரம்ப் ! பதிலடி கொடுத்த விநியோகஸ்தர்!

சமீபத்தில் நடந்து முடிந்த 92 ஆவது திரைப்படவிழாவில் தென் கொரிய படமான பாராசைட் 4 ஆஸ்கர்களை வென்ற நிலையில் அதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ட்ரம்ப் தற்போது ஆஸ்கர் வாங்கிய பாராசைட் படத்தை பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொலரோடாவில் நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய அவர் ‘ஆஸ்கர் விருதுகள் இந்த ஆண்டு எவ்வளவு மோசமாக இருந்துள்ளன என்று பார்த்தீர்களா?

தென் கொரியாவுடன் நமக்கு வர்த்தக பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராசைட் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த படம் நன்றாக இருக்கிறதா? அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. கொரியாவிலிருந்து ஒரு சிறந்த திரைப்படம்! சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன்’ எனப் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாராசைட் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் நியோன்  ‘ட்ரம்ப்பால் சப் டைட்டிலைப் பார்க்க முடியாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.