1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (13:27 IST)

ஜெயலலிதாவாக நடிக்க கங்கணாவுக்கு இவ்வளவு சம்பளமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கணா ரணாவத் நடிக்கிறார். 
 

 
தலைவர்கள் மற்றும் பிரபலங்களில் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கும் டிரெண்ட் பாலிவுட்டில் பிரபலம். அந்த டிரெண்ட் இப்போது தென்னிந்தியாவிலும் வளரத் தொடங்கியிருக்கிறது. 
 
தெலுங்கில் என்.டி.ஆர்,ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நடிகை சாவித்திரி ஆகியோரைத் தொடர்ந்து தமிழில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. 
 
ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருக்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுக்கும் படத்தின் தலைப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி வெளியிடப்பட்டது. 
 
தமிழில் தலைவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் இந்தியில் ஜெயா என்ற பெயரில் தயாராகிறது. இதற்காக இந்தியின் முன்னணி நடிகை கங்கணா ரணாவத்திடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பெண் தலைவர்களுள் ஒருவரான ஜெயலலிதா மேடத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது தான் செய்த பாக்கியம் என்று கூறி அவர் நெகிழ்ந்திருக்கிறார். 
 
பாகுபலி உள்ளிட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், தலைவி படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். அவர் இந்தியிலும் கங்கணா ரணாவத் கடைசியாக நடித்த மணிகர்ணிகா படத்திற்கும் திரைக்கதை எழுதியிருந்தார். 
 
இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இந்தநிலையில், தலைவி படத்துக்காக கங்கணா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளமாகப் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அது உண்மையெனில் இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகப் பெரும் முதல் நடிகை என்ற பெருமையை கங்கணா ரணாவத் பெறுவார்.