ஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா?

sigai
Last Modified புதன், 9 ஜனவரி 2019 (13:20 IST)
அடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகை சிறப்புத் திரைப்படமாக தமிழ் திரையுலகிலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகவுள்ள நிலையில், நடிகர் கதிர் பெண் வேடம் ஏற்று நடித்துள்ள 'சிகை' என்னும் திரைப்படம் தளத்தில் (Online streaming site) வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளை ஒட்டி வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, அதிக திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டியும் இருக்கும்.
 
அந்த வகையில், அடுத்த வாரம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டும் நாளை (ஜனவரி 10) வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மற்ற திரைப்படங்களை போன்று திரையரங்கில் படத்தை வெளியிடுவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட சிகை என்னும் திரைப்படம் இதுவரை தமிழ் திரைத்துறை பார்த்திராத ஜீ5 தளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது.
 
'மதயானை கூட்டம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'விக்ரம் வேதா'. 'பரியேறும் பெருமாள்' ஆகிய திரைப்படங்களின் மூலம் பலரது கவனத்தை பெற்ற நடிகர் கதிர் கதாநாயக நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார்.
 
திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த வாரம் இணையவழி ஒளிபரப்புத் தளமான ஜீ5யில் (ZEE5) நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இதுவரை தமிழ் திரையுலகில் வெளியாகி சில மாதங்களான திரைப்படங்களே நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜீ5 என்னும் இணையதளத்தில் தற்போது முதல் முறையாக இந்த திரைப்படம் நேரடியாகவே இணையதளத்தில் வெளியானது குறித்தும், அதற்கு மக்களின் வரவேற்பு இருக்குமா? இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்தும் இந்த கட்டுரை அலசுகிறது.
 
"கோடம்பாக்கத்தின் சிக்கல்கள்"
pettai
கிட்டத்தட்ட 12 மொழிகளில் திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு காணொளி சேவைகளை வழங்கி வரும் ஜீ5, இந்த திரைப்படம்தான் தங்களது தளத்தில் வெளியிடப்படும் முதல் நேரடி தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழகமெங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், சிகை போன்ற திரைப்படங்கள், தொடர்கள் இணையவழி ஒளிபரப்பு தளங்களை நோக்கி செல்வதற்காக காரணம் என்ன என்று திரைப்பட ஆர்வலர் சரா சுப்ரமணியத்திடம் பிபிசி கேட்டது. "திரையுலகை நோக்கிய தங்களது கனவை அடைவதற்காக கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை கடந்து உருவாக்கிய படைப்பை மக்களுக்கு கொண்டுசெல்வதில் இருக்கும் தடைகளே இந்த புதிய போக்குக்கான காரணம்" என்று கூறுகிறார் சரா.
 
"அனைவரும் அதிக பொருட்செலவு மிக்க திரைப்படங்களை எடுக்கவும் முடியாது, அதற்கு அவசியமும் இல்லை. இந்நிலையில், தனது படைப்பின் தரத்தை மட்டுமே முதலாக கொண்டு திரைப்படத்தை எடுப்பவர்கள் பலராலும் பெரிய நடிகர்களுடன் போட்டியிட்டு திரையரங்கங்களை பிடிக்க முடியாது. அப்படியே சில திரையரங்கள் கிடைத்தாலும், அவை வருமானத்தை ஈட்டுவதற்கு போதுமானதாக இல்லை."
 
சரா சுப்ரமணியம்
 
ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை சில விதிவிலக்குகள் உள்ளதாக கூறும் சரா, "குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட திரைப்படங்கள் முதலில் குறைந்த திரையரங்கங்களிலேயே வெளியிடப்பட்டது. பிறகு அதுதொடர்பான பேச்சு சமூக ஊடங்கங்களில் வைரலாகவே படிப்படியாக திரையரங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
 
ஆனால், இதே நிலை மற்ற திரைப்படங்களுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
''இணையப்புரட்சி'
 
நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற இணையதள ஒளிபரப்பு தளங்களில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட ஆங்கிலம் போன்ற சில மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் நேரடி திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இன்னமும் திரையரங்கத்தை மையாக கொண்ட கலாசாரமும், ஒப்பீட்டளவில் அதிகளவிலான இணையதள பயன்பாடும் இல்லாத தமிழ் திரையுலகில் இதுபோன்ற முயற்சிகள் எடுபடுமா என்று கேள்வியை முன்வைத்தபோது, "கடந்த சில ஆண்டுகளாக, அதுவும் குறிப்பாக ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் நாட்டில் 'இணையப்புரட்சி' ஏற்பட்டுள்ளதுடன், தற்போது மக்கள் கட்டுரைகளை விட காணொளிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடி செல்கின்றனர்" என்று கூறுகிறார்.
petta
"இந்தியாவை பொறுத்தவரை நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற இணையதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும், இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பதற்கு தேவையான இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளும் மேம்பாடடைந்துள்ளதால், குறிப்பிடத்தக்க அளவில் மக்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை" என்று அவர் உறுதிபட கூறுகிறார்.
 
"மக்கள் 29 ரூபாய் செலவிடமாட்டார்களா?"
 
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'மதயானை கூட்டம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் கதிரின் ஆறாவது படம் 'சிகை'. 'கிருமி', 'பரியேறும் பெருமாள்' ஆகிய திரைப்படங்களின் மூலம் அறியப்படும் நடிகர் கதிரிடம், திரையரங்கில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் எடுக்கப்பட்ட 'சிகை' தற்போது இணையதளத்தில் வெளியாவது குறித்து கேட்டபோது, "திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும், நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களில் படத்தை பார்ப்பவர்களுக்கும் வெவ்வேறான ரசனை உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
 
"அந்த வகையில் படத்தை முடித்ததும் சிகையை திரையரங்கில் வெளியிடுவதைவிட ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவதே சிறந்தது முடிவு செய்தோம். இந்த திரைப்படம் நகைச்சுவை ஏதுமின்றி, முற்றிலும் கதையை மையாக கொண்டு உருவாக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கூட்டமாக திரையரங்கில் காண்பதைவிட தங்களுக்கு விரும்பிய இடத்தில் எளிமையாக பார்க்கும் வகையிலான இந்த வழியை பின்பற்றுவதே சிறந்தது என்று முடிவு செய்தோம்" என்று அவர் கூறுகிறார்.
 
கதிர்
 
ஒரு வளர்ந்து வரும் நடிகராக உங்களது திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாவதை விட இணையதளத்தில் வெளியாவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கதிரிடம் கேட்டபோது, "நான் இதற்கு முன்பு நடித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தோடு ஒப்பிடும்போது இந்த படம் முழுவதும் வேறுபட்ட கதைக்களத்தை கொண்டது. அதேபோன்று தொடர்ந்து ரசிகர்களை ஒரேவிதமான தளத்தின் மூலமாக சென்றடைவதைவிட திரையுலகின் அடுத்தகட்டமாக கருதப்படும் இணையதளங்கள் வழியாக இந்த திரைப்படம் வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சியே. அதுமட்டுமின்றி, எனது திரைப்படம் உலகம் முழுவதும் காலத்துக்கும் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்குமென்று என்று நான் நம்புகிறேன்" என்று கூறுகிறார்.
petta
ரசிகர்கள் எந்தளவுக்கு இதுபோன்ற தளங்களை நாடிவந்து திரைப்படங்களை காண்பார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, "கையில் அலைபேசி இல்லாதவர்கள் யாருமில்லை என்ற இந்த காலத்தில் வலுவான, வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கதிர் தெரிவித்தார்.
 
திரையரங்க ரசிகர்களை முதலாக வைத்து எடுத்த இந்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதால் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, "எங்களது இந்த புதுமையான முயற்சியின் மூலம் இலாபமே கிடைத்துள்ளது. ஏனெனில், இணையதளத்தில் படத்தை வெளியிடுவதில் வெற்றி என்பது அந்த குறிப்பிட்ட படத்தின் முதலீட்டு தொகையை அடிப்படையாக கொண்டது. எனவே, திரைப்படங்களுக்கு மட்டுமின்றி, தரமான படைப்புகள் இருந்தும் திரைத்துறையில் கால்பதிக்க முடியாதவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வழியாக இணையதளங்கள் விளங்கும்" என்று கதிர் பதிலளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :