செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (16:46 IST)

சத்யா - திரைவிமர்சனம்!!

கடந்த ஆண்டு துவக்கத்தில் தெலுங்கில் ரவிகாந்த் பிரபு இயக்கத்தில் வெளியான க்ஷணம் படத்தின் ரீமேக்தான் சத்யா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலஷ்மி, சதிஷ், யோகிபாபு, நிழல்கள் ரவி, ஆனந்த ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சிமோன் இசையமைத்துள்ளார்.
 
தன் குழந்தை கடத்தப்பட்டதாக பெண் ஒருவர் சொல்ல, விசாரிக்கும்போது அப்படி ஒரு குழந்தையே இல்லை என்கிறார்கள் எல்லோரும். இதை மையமாக வைத்து விரிகிறது கதை.
 
சிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது. 
 
பின்னர் சிட்னியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சிபிராஜ்-க்கு அவனது முன்னாள் காதலி ரம்யா நம்பீசனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. தன் குழந்தை கடத்தப்பட்டு விட்டதாகவும் அதை மீட்டுத்தர வேண்டுமென்றும் கேட்கிறாள். 
 
இதனால் இந்தியாவுக்குத் திரும்பும் சத்யராஜ், அந்தக் குழந்தை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும்போது அப்படி ஒரு குழந்தையே இல்லையென பலரும் சொல்கிறார்கள். காவல்துறையும் அதையே சொல்கிறது. உண்மையில் குழந்தை இருந்ததா, இருந்திருந்தால், உண்மையில் கடத்தப்பட்டதா என்பதை சத்யா கண்டுபிடிப்பதே மீதிக் கதை.
 
சிபிராஜின் திரைவாழ்வில் இந்தப் படம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் குழம்பும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். ரம்யா நம்பீசனுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. 
 
குழந்தையைத் தேடும் தாயாக வரும் ரம்யா நம்பீசன், காவல்துறை அதிகாரியாக வரும் ஆனந்த் ராஜ், போதைப்பொருள் கடத்தல்காரனாக வரும் சதீஷ் ஆகியோருக்கும் இது முக்கியமான படம். சதீஷ் இந்த படத்தில் மாறுபட்டு காமெடி இல்லாமல், பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். 
 
இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. பிரதீப்பின் முந்தைய படமான சைத்தான், சரியாக ஓடவில்லையென்றாலும், இந்தப் படத்தில் அதைச் சரிக்கட்டியிருக்கிறார். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை ஒரே வேகத்தில் செல்வது படத்தின் பலம். சிமோன் கே.எஸ் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது.