சட்டுன்னு படத்தை முடிங்க – அண்ணாத்த படக்குழுவுக்கு ரஜினி போட்ட கண்டீஷன்!
ரஜினி அண்ணாத்த படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க சொல்லியுள்ளாராம்.
ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்ட நிலையில் அண்ணாத்ததான் அவரின் கடைசி திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அரசியல் பணிகளுக்காக இந்த படத்தை சீக்கிரமே முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ரஜினி. இதனால் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க சொல்லி அண்ணாத்த படக்குழுவுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளாராம் ரஜினி.
அதற்கு மற்றொரு காரணமாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் செலவுக்கு நிறைய பணம் தேவை என்பதால் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தால்தான் கைக்குப் பணம் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.