அக்னி கலச புடவை வேண்டுமா? திரௌபதி இயக்குனரைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி பகிர்ந்திருந்த ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் இதுவரை 14 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது திரௌபதி திரைப்படம்தான் எனக் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக அந்த படத்துக்கு எல்லா தரப்புகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்களே வந்தன. மேலும் அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஒரு சாதியை தூக்கிப் பிடிப்பதாகவும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை இழிவாக சித்தரிப்பதாகவும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர் அடிக்கடி கேலி செய்யப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து மோகன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘அக்னி கலசம் பொறிக்கப்பட்ட புடவைகள் விற்பனைக்குக் கிடைக்கும் என சொல்லி தொடர்பு எண்களைப் பகிர்ந்திருந்தார்.
அவர் குறிப்பிட்டுள்ள புடவையில் இடம்பெற்றுள்ள அக்னி கலசம் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பலரும் அவரை புடவை வியாபாரியாக மாறி விட்டீர்களா எனக் கேலி செய்யும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்