வியாழன், 7 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:36 IST)

தலித் கலைஞர்களின் படைப்புகளை மீண்டும் சேர்க்கவேண்டும்… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை!

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் உள்ளிட்ட கலைஞர்களின் பல தலித் படைப்புகள் நீக்கப்பட்டு இருப்பது கண்டிக்கப்பட்டு வருகிறது.

அது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க்கவிஞர் சுகிர்தராணி கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனக் கூறியுள்ளார்.