1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (08:21 IST)

இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி – தொடர் தீவிரசிகிச்சை !

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஜினியை ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படமென்றால் அது முள்ளும் மலரும்தான். அதுவரை வில்லனாக நடித்துவந்த ரஜினி அதன் பிறகே கதாநாயகனாக உருவெடுக்க ஆரம்பித்தார். மணிரத்னம், ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ரஜினி சூப்பர் ஸ்டாரான பின்பு படம் இயக்கியபோது ரஜினி முள்ளும் மலரும் படத்தில் நடித்த நடிப்பை நெருங்க வேண்டும் என்பதே தங்கள் ஆசை என வெளிப்படுத்தினர்.

அதன்  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து ஒரு வார காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் நேற்று மாலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சனைக் காரணமாக டயாலிஸிஸ் செய்யப்பட்டது. ஆனால் வயது மூப்புக்காரணமாக அவரது உடல் டயாலிஸிஸிற்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மகன் ஜான் மகேந்திரன் டிவிட்டரில் ‘அப்பாவுக்காக பிராத்தியுங்கள்’ என்று தனது தந்தையின் கையை புகைப்படம் எடுத்து பதிந்துள்ளார்.