1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:41 IST)

சுனாமியில் தொலைந்த காதல்தான் கயல் - இயக்குனர் பிரபு சாலமன்

மைனா படத்துக்குப் பிறகு பிரபு சாலமனின் சினிமா உலகம் மாறிப் போனது. வித்தியாசமான கதை இருக்கிறதோ இல்லையோ வித்தியாசமான களம் இவரது படத்தில் நிச்சயம் இருக்கும். கும்கிக்குப் பிறகு இயக்கும் கயல் படத்தின் கதைக்களம் கடலும் கடல் சார்ந்த பகுதிகளும். படத்தின் டப்பிங் பணிகளில் இருந்தவர் படம் குறித்து திருப்திகரமாக உரையாடினார்.
ஒரு படத்துக்கு இவ்வளவு மெனெக்கெடல் தேவையா?
 
மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயம். சிலருக்கு சுகமான அனுபவம். அந்தவகையில் எனக்கு அது சுகமான அனுபவம். சின்ன ஓட்டைதானே என்ற அலட்சியம் கப்பலையே கவிழ்த்துவிடும். சின்னச் சின்ன விஷயத்திலும் கவனம் செலுத்துவது அழகான படைப்பை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
 

கயல் படத்தின் கதை என்ன?
 
சுனாமி பாதிப்புகள் ஏற்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டது. டிசம்பர் 26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது.

அதிலும் கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதித்தன. அதைத்தான் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறோம். எவ்வளவு பேர் சொத்து, உறவுகள், உடமைகள் இழந்தார்கள். அதில் தொலைந்து போன ஒரு காதல்தான் கயல்.
 
அதென்ன... தொடர்ந்து புதுமுகங்கள்? மாஸ் நடிகர்கள் அலர்ஜியா?
 
என்னுடைய ஆரம்பகால படங்களில் அர்ஜுன், விக்ரம், சிபி, கரண் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்களே. மைனா, கும்கி, கயல் போன்ற என் யதார்த்த கதைகளுக்கு நட்சத்திர நடிகர்கள் சரியாக மாட்டார்கள்.

என்கூடவே பயணமாகிற நடிகர்கள் மைனாவுக்கும், கும்கிக்கும் தேவைப்பட்டது. லொகேஷன் கொடுத்த இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப மைனா படத்தை எடுத்தோம். அதனால் புதுமுகம்தான் சரி. யானையின் மூடுக்கேற்ப படமாக்கப்பட வேண்டியிருந்ததால் கும்கிக்கும் புதுமுகம் தேவைப்பட்டது.
 

கயல் படத்தில் என்ன நெருக்கடி?
 
இந்தப் படத்துக்காக பிரமாண்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதில் காலை 7 மணிக்கு இறங்கினால் மாலைவரை அதில் இருக்கக் கூடிய புதுமுகம் தேவை என்பதால் கயலிலும் புதுமுகத்தை தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.
சாதாரண கமர்ஷியல் அடிதடி படங்கள் இனி எடுக்கப் போவதில்லையா?
 
அடிதடி என்பது மட்டும் வாழ்வியல் அல்ல. நம்மை கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு. நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு. அதை பதிவு செய்வதில் கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது. எதை பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும்.

இல்லை என்றால் நாம் தூக்கி எறியப்படுவோம். நம் வீட்டிற்குள் 340 சேனல்கள் வருகிறது. பெண்கள் சமையலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள். இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த சின்ன சைஸ் பெட்டிக்குள் உலகம் நம் முன்னே வந்து விடுகிறது. அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டி உள்ளது.  
 

ரொம்பவும் சீரியஸ் படமா?
 
முழு காமெடியுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கை தான் சுகமானதாக அமையும் என்கிற மையக் கருதான் காமெடியுடன் சொல்லப் படுகிறது. கடைசி அரைமணி நேரம் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும்.