2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் என்ற கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் போட்டியை ஒரு திருவிழா போலவே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 2025 முதல் 2027 வரை மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14 முதல் மே 25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல் மே 31ஆம் தேதி வரையிலும், 2027 ஆம் ஆண்டு மார்ச் 14 முதல் மே 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்திற்கு பிசிசிஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு தொடரிலும் 74 போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சவுதி அரேபியா நாட்டில் நவம்பர் 24 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் 574 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran