வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (10:00 IST)

தோனியின் கிளவுவ்ஸ் சர்ச்சை … ஐசிசியிடம் பணிந்தது பிசிசிஐ – முத்திரையை நீக்க சம்மதம் !

தோனியின் கையுறையில் இந்திய ராணுவத்தின் முத்திரை பதித்திருப்பது தொடர்பான சர்ச்சையில் ஐசிசியின் முடிவுக்கு பணிந்துள்ளது பிசிசிஐ

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தென் ஆப்பிரிக்கா அணியுடனான லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  அந்த போட்டியில் தோனி கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ”பாலிதான்” என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் இந்திய ராணுவத்தினரின் தியாகத்தைக் குறிக்கும் முத்திரையாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தோனி 2015 ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  இதனால் அவர் இந்த முத்திரையை தனது கிளவுஸில் குத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து தோனி ரசிகர்களும் இந்திய ஊடகங்களும் இதை ஊதிப் பெரிதாக்கி தோனியின் நாட்டுப்பற்று எனப் பேச ஆரம்பித்தன. 

இந்த சர்ச்சைகளை அடுத்து ஐசிசி, தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அகற்றப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. ‘ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள், ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை; எனவும் அறிவித்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் ‘ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக் கூடாது. ஆனால் தோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை. மேலும் முத்திரையை அகற்ற சொல்லி ஐசிசி எங்களுக்கு வேண்டுகோள்தான் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா போட்டிக்கு முன் இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். ஆனால் பிசிசிஐ –ன் வேண்டுகோளை ஐசிசி ஏற்கவில்லை.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஐசிசி-ன் முடிவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி நேற்றையப் போட்டியில் தோனியில் கிளவுஸில் இந்திய ராணுவ முத்திரை அகற்றப்பட்டது.