புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (10:48 IST)

இன்றாவது ஜொலிப்பாரா தோனி – கேரளாவில் இன்று 5-வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் மே..தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்தியாவும் சமன் செய்ய முயலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளனர்
 

கடந்த மாதம் இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. அதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நடந்து முடிந்துள்ள  நான்கு  போட்டிகளில் இந்தியா 2 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. இதனால் இந்தியா தொடரில் 2-1 க்கு என முன்னிலையில் உள்ளது.

 
முதல் போட்டியில் முஷ்டி முறுக்கிய இந்தியா 2-வது மற்றும் 3-வது போட்டியில் மோசமான பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கால் சற்று தடுமாறியது. அதையடுத்து காயத்தால் ஓய்வில் இருந்த புவனேஷ் குமார் மற்றும் பூம்ராவின் வருகை பௌலிங்கை பலப்படுத்தியது. கடந்த மாதம் 29–ந்தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் அனைத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு 224 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்திய அணியில் பேட்டிங்கில் ரோஹித், கோஹ்லி மற்றும் ராயுடு ஆகியோர் அசுர ஃபார்ம்மில் உள்ளனர். மேலும் பௌலிங்கில் குல்தீப், பூம்ரா மற்றும் கலீல் அஹ்மது ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் தோனியிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். தவான், ஜடேஜா, கேதார் ஜாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்பந்தத்த்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை அந்த அணியின் இளம் வீரர்களான ஷேய் ஹோப், ஹெட்மர் மற்றும் நர்ஸ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மூத்த வீரரான சாமுவேல்ஸ் தொடர்ந்து ஏமாற்றமளிக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில் ஒரு நாள் போட்டியையாவது சமன் செய்யும் முனைப்பில் அவர்கள் முழுமூச்சுடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.