கன்னி: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:12 IST)
மன்னிக்கும் குணம் உள்ள நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் என்ன பலன் தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துக் கொண்டு திக்கு திறையறியாது திண்டாட வைத்தார். காரண காரியமே இல்லாமல் பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தாரே! வாழ்க்கை மீதும் ஒரு வெறுப்பை உண்டாக்கி இது என்ன செக்கு மாட்டு வாழ்க்கை என்று புலம்ப வைத்தாரே! முகத்தில் ஒரு மலர்ச்சியே இல்லாமல் ஒரு நிமிடம் சிரித்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அழ வைத்தாரே! அப்படிப்பட்ட ராகுபகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டிற்குள் இடம் பெயர்கிறார்.
எனவே முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். எப்போதும் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். சோர்வு, களைப்புடன் காணப்பட்டீர்களே! இனி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப் போன தடைப்பட்ட காரியங்களையெல்லாம் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.
குடும்பத்திலும் நீங்கள் நல்லதே சொன்னாலும் உங்கள் பேச்சு சபை ஏறாமல் அவமதிக்கப்பட்டீர்களே! இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். என்றாலும் ராகு விரையஸ்தானமான 12-ல் மறைவதால் எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். வீண் அலைக்கழிப்புகளும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் ஒரு பட்ஜெட் போட்டு இதற்குள் முடிக்க வேண்டுமென்று நினைத்தால் முடியாமல் இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும். அவ்வப்போது கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
எவ்வளவும் பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருந்தக் கொண்டேயிருக்கும். சாதுக்கள், சித்தர்களின் சந்திப்பு நிகழும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் விரையாதிபதி சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். மறதியால் விலை உயர்ந்த நகை, செல்போனை இழக்க நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
ராகுபகவான் உங்கள் தன-பாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் தொட்ட காரியம் துலங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். வீடு, வாகன வசதிப் பெருகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல மனப்பெண் அமைவாள். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் மனஅழுத்தம், சின்ன சின்ன இழப்புகள், விபத்துகள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். உத்யோகத்தில் அனுசரித்துப் போவது நல்லது. பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
கன்னிப்பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். மொழி அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பொறாமையுடன் பழகிய சக மாணவர்களில் சிலர் வலிய வந்து பேசுவார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். விரும்பிய கோர்ஸில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். ஊரில் மரியாதைக் கூடும்.
வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள்.

வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துக் கொள்வீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். துரித உணவு, கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, ஸ்க்ராப் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலர் அதிக சம்பளத்துடன் புது வேலையில் சென்று அமருவீர்கள். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு கணவன்-மனைவிக்குள் பிரிவையும், திறமைக்கு அங்கீகாரமின்மையையும் ஏற்படுத்திய கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வருமானம் உயரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்தி போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்டு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அண்டை மாநிலம், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. சிலர் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோவில் கும்பாபிஷேத்திற்கு தலைமை தாங்குவீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் காய்ச்சல், மூச்சுத் திணறல், படபடப்பு வந்துச் செல்லும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பணப்பற்றாக்குறை சமாளிக்க வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத்துடனோ நடந்துக் கொள்ளவில்லை எல்லோரும் நடக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
உங்கள் தைரியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். சகோதரங்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.
புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து சொந்த தொழிலுக்கு மாறுவீர்கள். வேலையாட்கள் உங்களுடைய புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசி சில சலுகைத் திட்டங்களை பெற்றுத் தருவீர்கள். புது வாய்ப்புகள் வரும்.
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், இருட்டில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக அமையும்.

பரிகாரம்

காளையார் கோவிலுக்கு அருகிலுள்ள திருவாடானை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாயிரவல்லியம்மை உடனுறை ஸ்ரீஆதிரத்னநாயகேசுரரை ஏதேனும் ஒரு ஞாயிற்று கிழமையில் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மனவளங்குன்றியவர்களுக்கு உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :