ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (12:01 IST)

மதுரை சித்திரை தேரோட்டம் கோலாகலம்.! விண்ணைப் பிளந்த பக்தி கோஷம்..!!

Theroattam
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக  தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
 
இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக தற்போது திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு  கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.
 
சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும் , அருள்மிகு மீனாட்சிஅம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள  அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 
இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும்,  சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
 
சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து  முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்கின்றது. சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது மதியம் 12 மணிக்குள்  கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையவுள்ளது.
 
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் சங்கு முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று வணங்கி வருகின்றனர்.

தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில்,  மதுரை மாநகர  காவல்துறை சார்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.