வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

முழுமுதல் கடவுள் விநாயகர் எவ்வாறு உருவானார் தெரியுமா...?

ஒரு முறை சிவபெருமான் தவத்திற்கு சென்ற சமயத்தில், பார்வதி தேவி மஞ்சளை உருட்டி ஒரு மகனைச் செய்து அந்தப்புரத்தில் அச்சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு தனது அனுமதியில்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டு குளிக்கச்  சென்று விட்டார். அச்சிறுவன் தான் விநாயகர்.
சிவபெருமான் தவத்திலிருந்து திரும்பி, பார்வதி தேவியை பார்க்கும் நோக்கில் அந்தப்புரத்திற்கு செல்லும்போது விநாயகர், அன்னையின் அனுமதியின்றி யாரும் உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்துவிட்டார்.
 
அதனைக் கேட்டு சினம் கொண்ட சிவபெருமான், பார்வதி தேவியின் மகன் என்று அறியாது அச்சிறுவனுடன் சண்டையிட்டு முடிவில்  சிறுவனின் தலையைக் கொய்துவிட்டார்.
 
உயிரற்ற விநாயகர் உடலைப் பார்த்த பார்வதி தேவி மிகவும் கவலையுற்றார். அதனைக் கண்ட சிவபெருமான், பார்வதி தேவியின்  கவலையைப் போக்குவதற்காக, வடக்கு நோக்கி தலைவைத்து உறங்கும் சீவராசியின் தலையைக் கொய்து வருமாறு தனது  பூதகணங்கங்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் வடக்கு நோக்கி தலைவைத்து உறங்கிய யானையின் தலையினை கொய்து வந்து  சிவபெருமானிடம் தர, சிவபெருமான் உயிரற்ற விநாயகர் உடலில் அத்தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார்.
 
மேலும் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் விநாயகரை வழிப்பட்டுத் தொடங்க அக்காரியம் எந்தவிதமான தடங்கல் இன்றி செவ்வனே முடிவடைந்துவிடும் என்று அருளினார். இதுவே விநாயகர் வரலாறு என்று கூறுவர்.