தனுசு: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:15 IST)
மற்றவர்கள் தயவில் வாழ விரும்பாதவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றத்தையும், சிறுசிறு தலைக்குனிவான சம்பவங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபவான் இப்போது உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.
மற்றவர்கள் தயவின்றி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். எத்தனைப் பிரச்னைகள், நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறும் சக்தி உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி முழுமையடையும்.
என்றாலும் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். அவருக்கு நெஞ்சு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள், இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். எதிராளிகள் வாய்தா வாங்கி வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் நினைத்தது நிறைவேறும். வேலையில்லாமல் வீட்டிலே முடங்கிக் கிடந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். அயல்நாடு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
ராகுபகவான் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது பெருமூச்சுவிடுவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பொய்யான விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களுக்கு தெரிந்த வி.ஐ.பியை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென பிடிவாதமாக கேட்பார்கள்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பெரிய பதவியில் இருக்கும் பழைய நண்பர்களால் உதவிகள் உண்டு. நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மாணவ-மாணவிகளே! உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். அரசு தேர்வுகளில் வெற்றி உண்டு. வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். நீங்கள் நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை பெற்றோர் வாங்கித் தருவார்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையே வியந்து பாராட்டுமளவிற்கு உங்களுடைய களப்பணி சிறப்பாக இருக்கும். பொது மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும்.

கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த படம் ரிலீசாகும். உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். காய்கறிகளை பயிரிடுங்கள். பழைய கடன் தள்ளுபடியாகும். தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் வீட்டில் நடந்தேறும்.

வியாபாரம் செழிக்கும். அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு கணிசமாக ஆதாயமுண்டாகும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். இரும்பு, நெசவு, புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரினங்களால் லாபமமடைவீர்கள். உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார்.
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களை எதிரியை போல பார்த்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புது மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களை திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கேதுவின் பலன்கள் :இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு தாயாருடன் மோதலையும், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் தந்து எதிலும் முன்னேற விடாமல் நலிவடையச் செய்த கேதுபகவான் இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் முகமலர்ந்து அமர்கிறார். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள்.
இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பம் இன்ப மயமாகும். வேலைக் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஊர் ஓதுக்குபுறமாக வாங்கியிருந்த இடத்தை விற்று நகரத்தில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். வெளிநாட்டு பயணம் நீங்கள் எதிர்பார்த்த படி அமையும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய இமேஜ் அதிகமாகும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உயர்வு உண்டு.

சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அரசு விவகாரங்கள் தாமதமின்றி உடனே முடிவடையும். அக்கம்-பக்கம் கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒரு வழியாக தந்து முடிப்பீர்கள். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும் வரும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். தாயார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். மனைவிக்கு அப்ரண்டீஸ், சிறுநீரக கல், கழுத்தில் நரம்புக் கோளாறு வந்துச் செல்லும்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மகளின் கோபம் குறையும். அவருக்கு திருமணம் நிச்சயமாகும். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்தால் பணம் வரும். என்றாலும் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரிகளின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். சம்பளம் உயரும். மூத்த அதிகாரி அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்தப் பதவிக்குரிய பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள்.
இந்த இராகு-கேது மாற்றம் முனகிக் கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன் கூடாபழக்க வழக்கங்களிலிருந்து உங்களை விடுவிப்பதாகவும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.

பரிகாரம்:

மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாகநாதரை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோவிலை புதுப்பிக்க உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :