மீனம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:19 IST)
மற்றவர்களை புண்படுத்தாமல் மணிக்கணக்கில் பேசுபவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு எதிலும் ஒருபிடிப்பில்லாமல் செய்தாரே! உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே! சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே! தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.
குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே! உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே! இப்படி நாலா விதங்களிலும் உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள்.
வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகளுக்கு வரன் தேடி அலுத்துப்போனீர்களே! இந்தாண்டு கண்ணுக்கழகான மணமகன் அமைவார். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி, உத்யோகம் அமையும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பிறமொழியினர், வெளிமாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் தீரும். அரசாங்க பதவி சிலருக்கு தேடி வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். ஆனால் கண் எரிச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். புது வேலை அமையும்.
ராகுபகவான் உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வேலைச்சுமையால் டென்ஷன், காரியத் தடைகள், ஆடம்பரச் செலவுகள் என வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பணவரவு உண்டு. மனைவியுடன் ஆரோக்யமான விவாதங்கள் வரும். அவரின் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வாகனம் பழுதாகி சரியாகும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை கண்டறிவதில் குழப்பம் வரும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னிப் பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். நல்ல வரன் அமையும். வேலைக் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! அதிக மதிப்பெண் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக் கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

வியாபாரத்தில் இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். தொழிலில் ஆர்வம் பிறக்கும். புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆட்டோ மொபைல், ஸ்டேஷனரி, மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் வழக்கில் வெற்றி பெற்று பெரிய பதவியில் அமர்வீர்கள். சந்தித்த அவமானங்கள் நீங்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாராணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் கிடைக்கும். உங்கள் அலுவலகம் நவீனமாகும். அலுவலகத்தில் உங்கள் புகழ் பரவும்.
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு ஆரோக்ய குறைவையும், மனதில் ஒருவித பதட்டத்தையும் தந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது 12-ம் வீட்டில் சென்று மறைகிறார். எனவே மனப்போராட்டங்கள் ஓயும். சின்னதாக ஒரு நெஞ்சு வலி வந்தாலும் பெரிய நோய் ஏதேனும் இருக்குமோ என்ற பயம் இனி விலகும். ஆரோக்யம் சீராகும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கோபம் குறையும். கலையிழந்திருந்த உங்கள் முகம் இனி மலரும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களின் உள்மனதைப் புரிந்துக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். என்றாலும் திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். எவ்வளவுப் பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சில நாட்கள் தூக்கம் குறையும்.
பழைய கசப்பான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து எடுத்து நடத்துவீர்கள். சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடிவடையும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. சில இருசக்கர வாகனத்தை மாற்றி நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல அவ்வப்போது இருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கை துரேகமான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்கள் நட்பை இழக்க நேரிடும். எல்லோரும் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். தந்தையாரின் ஆதரவுப் பெருகம். தந்தைவழி சொத்துகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அலுவலகப் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.
இந்த ராகு-கேது மாற்றம் அடிமைபட்டுக் கிடந்த உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன் திடீர் யோகங்களை தருவதாக அமையும்.

பரிகாரம்:

புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் நாகராஜன் பூஜித்த ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம்பாளையும் வணங்குங்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :