வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:27 IST)

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - துலாம்

மறப்போம் மன்னிப்போம் என்றிருப்பவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

சோர்வு, களைப்பு நீங்கும். முடிவெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். தன்னிச்சையாக செயல்பட்டு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
 
சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். யோகாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பாதகாதிபதி சூரியன் சாதகமாக இல்லாததால் இனந்தெரியாத மனக்கலக்கங்களும், எதிர்காலம் பற்றிய கவலைகளும் வந்துப் போகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும்.
 
பாதச் சனி தொடர்வதாலும், 5-ல் கேது நிற்பதாலும் அவ்வப்போது சலிப்பு, சோர்வு வந்து நீங்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவியின் உடல் நிலை சீராகும். பனிப்போர் நீங்கும். உடன்பிறந்தவர்களால் பண உதவிகளும், பொருளுதவிகளும் கிடைக்கும். அரைக்குறையாக இருந்த வீடு கட்டும் வேலை துரிதமாகும். ரசனைக்கேற்ப வீட்டு மனையும் அமையும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
 
கன்னிப் பெண்களே! வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்தபடி இடமாற்றம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் மாதமிது.