துலாம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:13 IST)
மற்றவர்களின் வலி, வருத்தங்களை அறிந்து ஆறுதல் சொல்பவர்களே! அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் நின்றுக் கொண்டு திடீர் பயணங்களையும், சேமிக்க முடியாதபடி செலவினங்களையும், தூக்கமின்மையையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டாகும். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிட்டும்.
எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். சொந்த-பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள்.
கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். கறாராகவும், கண்டிப்பாகவும் பேசுவதை தவிர்த்து கனிவாகப் பேசுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
நீங்கள் வெகுநாட்களாக மனதிற்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீட்டை, இப்பொழுது நிஜமாக கட்டும் வாய்ப்பு அமையும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுமூகமாக முடியும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். சிலர் சொந்த தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. மலையாளம், கன்னடம் பேசுபவர்களால் நன்மை உண்டாகும்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவிவழியில் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சீர் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். பணவரவு இருந்தாலும் ஒருபக்கம் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். என்றாலும் பயணங்களால் அலைச்சல் இருக்கும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அலர்ஜி, இன்பெக்ஷன், தேமல் வரக்கூடும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. எந்த விஷயமாக ஆற அமர யோசித்து களம் இறங்கப்பாருங்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். அவ்வப்போது வரும் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் மதிப்பெண் கூடும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் சரியாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணத் தடைகள் நீங்கும்.
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். உங்கள் அறிவுப்பூர்வமான, சாதுர்யமான பேச்சை கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய பெயர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
விவசாயிகளே! இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். அதிரடியாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், கண்சல்டன்சி, பதிப்பகம் வகைகளால் லாபமடைவீர்கள். வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். உங்கள் கருத்திற்கு ஒத்தும் போகும் பங்குதாரரை சேர்ப்பீர்கள்.
உத்யோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு அதிரடி வளர்ச்சியையும், பிரபலங்களின் அந்தஸ்தையும் பெற்றுத் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய வீடான 5-ம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும்.
பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. கோர்டு, கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை.
மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து சம்பந்தம் செய்துக் கொள்வது நல்லது. மகனின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். அவரின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. சிலர் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. படிகளில் ஏறும் போது கவனம் தேவை.
உறவினர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். பாகப் பிரிவினையால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புதிய நண்பர்களை நம்பி பழைய நட்பை இழந்துவிடாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். குற்றமற்றவர்கள் யாரும் இல்லை யாராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் சிறுசிறு குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும்.
குற்றம் பார்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது. மாதா மாதம் கடன் தொகை கொடுத்து அசலைத் தந்தாலும் வட்டி மட்டும் குறையவே இல்லையே என்று அவ்வப்போது கலங்குவீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தைரியஸ்தானாதிபதியும் -சஷ்டமாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மனோபலம் கூடும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் அவ்வப்போது ஒருவித வெறுமையை உணருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும்.
உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் பிறக்கும். அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.
இந்த இராகு-கேது பெயர்ச்சி ஒருபக்கம் உங்களை எதிர்நீச்சல் போட வைத்தாலும் மற்றோருபக்கம் விழுந்துக் கிடந்த உங்களை தலை நிமிரச் செய்வதுடன், சமூகத்தில் புது கௌரவத்தையும் பெற்றுத் தரும்.

பரிகாரம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் நயினார்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாதரை சதுர்த்தசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :